இரவு 12 முதல் பகல் 12: விமான நிலையத்தில் விஜயகாந்துக்கு என்னாச்சு?

Published On:

| By Balaji

சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த், நேற்று நள்ளிரவு 12 மணிக்கே சென்னை விமான நிலையம் வந்தடைந்துவிட்டார். ஆனாலும் 12 மணிநேரத்துக்கு மேலாகியும் விமான நிலையத்தில் இருந்து விஜயகாந்த் வெளியே வராததால், விமான நிலைய வாசலில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குழப்பத்துடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் சரியாக 12 மணி நேரத்துக்குப் பின் இன்று பகல் 12.15 மணிக்குதான் பேட்டரி கார் மூலம் விஜயகாந்த் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். நடக்க முடியாமல் பேட்டரி காரில் தனது வழக்கமான அரசியல் உடையான வேட்டி சட்டையில் கையெடுத்து கும்பிட்டபடியே வெளியே வந்தார் விஜயகாந்த்.

இரவு 12 மணிக்கே விமான நிலையம் வந்துவிட்ட விஜயகாந்த் பகல் 12 மணிக்கு மேல் வெளியே வர என்ன காரணம்?

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இரண்டாவது முறையாக உயர் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா, இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் உள்ளிட்டோரும் சென்றனர்.

அமெரிக்காவில் நண்பர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்ற அவருக்குக் கடந்த ஜனவரி 8ஆம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த விஜயகாந்த் பூரணநலமடந்துள்ளார். பிப்ரவரி 16ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று ஏற்கனவே தேமுதிக தரப்பில் செய்திக் குறிப்பும் வெளியிட்டிருந்தனர்.

அதாவது அமெரிக்கா செல்லும்போதே சென்னை திரும்புவதற்கான விமான டிக்கெட்டும் விஜயகாந்துக்கு எடுத்துவிட்டனர். அதன்படி அமெரிக்காவில் இருந்து பாரிஸ் வழியாக சென்னை திரும்ப ஜெட் ஏர்வேஸ் 9W127 என்ற விமானத்தில் சென்னை திரும்புவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விமானம் நள்ளிரவு 12.05 மணிக்கே சென்னை வந்துவிடும்.

ஆனால், தகவல் தொடர்பின் காரணமாக துபாய் வழியாக எமிரேட் விமானத்தில் விஜயகாந்த் வருகிறார் என்று சென்னை கட்சித் தலைமையகத்துக்கு செய்தி வந்து, அதன்படி விமானம் காலை 8.30க்கு வரும் அதில்தான் விஜயகாந்த் சென்னை திரும்புகிறார் என்று அறிவித்தனர்.

ஆனால் விஜயகாந்த் இரவு 12.05 மணிக்கே சென்னை விமான நிலையம் திரும்பிவிட்டார். விஜயகாந்த் அமெரிக்கா புறப்பட்டபோதே அவருக்கு விமான நிலையத்தில் சில உதவிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்துகொடுத்தார் என்று மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதுபோலவே விஜயகாந்த் சென்னை திரும்பும்போதும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் விஜயகாந்துக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு உத்தரவு போட்டிருந்தார். சென்னை விமான நிலையத்திலேயே கஸ்டம்ஸ் ரூம் மிக விசாலமானது. விஜயகாந்த் லேண்ட் ஆனதுமே அவரை மத்திய அமைச்சர் உத்தரவுப்படி அங்கேதான் தங்க வைத்தார்கள்.

நெடுநேரம் பயணக் களைப்பிலும், மருத்துவ சிகிச்சை காரணமாகவும் விஜயகாந்த் நன்றாக தூங்கிவிட்டார். இன்று காலை 11 மணிக்கு மேல்தான் கண் விழித்திருக்கிறார். அதற்குள் காலை 8.30 இல் இருந்தே தேமுதிகவினர் விமான நிலைய வாசலில் ஆயிரக்கணக்கில் திரள ஆரம்பித்துவிட்டனர்.

விஜயகாந்த் வந்த விமானத்துக்குப் பின் 17 விமானங்கள் வந்துவிட்ட பின்னரும் கூட்டம் குறையவில்லை. ஏற்கனவே காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து விமான நிலையங்களில் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்புப் படையினர் ஏன் இவ்வளவு கூட்டம் என்று விசாரணை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.அவர்களிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள், விஜயகாந்த் ஓய்வெடுத்து வரும் தகவலை கூறி மத்திய அமைச்சரின் உத்தரவுப்படிதான் நாங்கள் நடந்துகொள்கிறோம் என்று விளக்கமும் அளித்தனர்.

இவ்வளவு பரபரப்புக்கு இடையில் கஸ்டம்ஸ் ரூமில் நன்றாக ஓய்வெடுத்த விஜயகாந்த் இன்று பகல் 12.15 மணிக்கு பேட்டரி கார் மூலம் வெளியே வந்து பின் தன் வேனில் ஏறி சாலிகிராமத்தில் இருக்கும் தன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, “விஜயகாந்துக்கு அளிக்கப்பட்ட மேல் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார்.பயணக் களைப்பின் காரணமாக விமான நிலையத்தில் ஓய்வெடுத்தார். விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்பார்” என்று தொண்டர்களுக்கு உற்சாகத் தகவல் தந்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share