�இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று கடந்த மாதம் 28ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டுமெனவும் இடைக்காலமாகத் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தினகரனின் மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 15ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று (மார்ச் 15) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் தலைமை நீதிபதி அமர்வே விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
மார்ச் 14ஆம் தேதிவரை குக்கர் சின்னத்தை வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் தினகரன் அமமுகவைத் தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் முடியவுள்ள நிலையில், குக்கர் சின்னம் தொடர்பாகத் தங்களுக்குச் சாதகமான உத்தரவு வரும் என்று அமமுகவினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.�,