ஆரா
கஜா நமக்கு ஏராளமான பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் நாம் அந்தப் பாடத்தை கற்றுக்கொண்டோமா என்பதுதான் பிரச்சினை.
வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் சூறையாடப்பட்டுவிட்டன. குச்சியை ஒடித்துப் போடுவது போல் தென்னைமரங்களை முறித்தும், கொண்டையைக் கிள்ளியும் வீசியெறிந்திருக்கிறது கஜா புயல்.
திருத்துறைப்பூண்டியிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மாங்குடி ஒதியத்தூர் கிராமம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அது எனது உறவினர்கள் வசிக்கும் கிராமம். அவர்களோடு அலைபேசித் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் நேரடியாகக் கண்டுவருவதற்காக 18ஆம் தேதி நேரில் சென்றேன். ஊரெங்கும் கஜாவின் சுவடுகள்தான். அந்த அழகிய கிராமத்தைச் சிதைத்து வைத்திருந்தது கஜா.
**தாத்தா வைத்த தென்னை!**
செல்லும் வழியில் பல நூறு தென்னை மரங்கள் பாதியும் மீதியும் மொட்டையுமாய் நின்றிருந்தன. சென்ற முறை வந்தபோது கம்பீரமாய் காற்றோடு பேசிக்கொண்டிருந்த தென்னை மரங்கள் கஜாவின் தாக்குதலால் தலை கவிழ்ந்து, ஒடிந்து கிடந்தன. சில தென்னை மரங்கள் வளைந்து குளத்தில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தன. இந்த நிலையில், வீட்டு வாசலில் வைக்கோல் போருக்கு அந்தப் பக்கம் இரு தென்னை மரங்கள் கஜாவைப் பார்த்துச் சிரித்தபடியே செம்மாந்து நின்றிருந்தன.
“இந்தச் சின்ன தென்னை மரங்கள் எல்லாம் இப்படி குச்சி போல ஒடிஞ்சிருக்கு. ஆனால் இவ்வளவு உயரமா நெடுநெடுனு நிக்குற இந்த தென்னை மரத்துக்கு ஒண்ணும் ஆகலையே” என்று நான் கேட்க, என் பாட்டி அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தார். இப்போது பாட்டிக்கு 90 வயதுக்கும் மேல் ஆகிறது.
“நான் இதுபோல ஒரு மூணு நாலு புயலப் பாத்துட்டேன். நான் இந்த ஊருக்கு கல்யாணம் ஆகி வர்றச்சே அதோ இருக்கு பாரு அந்த ரெண்டு தென்னை மரமும் அரை மரமா சின்னதா நின்னுது. அப்ப அது இன்னும் பூக்க ஆரம்பிக்கல. தாத்தாவோட சின்ன வயசுல அதை வச்சிருக்கார். என்னோட தலை தீபாவளி நேரத்துல ஒரு புயல் அடிச்சது. அப்பதான் அந்த தென்னை மரம் பூக்க ஆரம்பிச்சிருந்தது. அதுக்கப்புறம் காய்க்க ஆரம்பிச்சுது. தாத்தா அந்த மரத்துலேந்து இளநீர் பறிச்சுக் கொடுப்பார். அமிர்தமா இருக்கும். இப்பவும் எப்படி நிக்குது பாரு. தாத்தா போயி பல வருஷம் ஆச்சு. அவர் ஞாபகம் வரும்போதெல்லாம் அந்த ரெண்டு தென்னை மரத்தையும் அண்ணாந்து பார்ப்பேன். அப்படியே லேசா காத்துல வளைஞ்சு குனியும். தாத்தா ஏதோ சொல்ல வர்றது மாதிரியே இருக்கும். நான் இந்த ஊருக்கு வாழவந்து அறுபது வருஷத்துக்கு மேல ஆகுறது. இந்த புயலுக்கும் எப்படி ரெண்டு தென்னையும் நிக்குது பார். ஏன்னா அது தாத்தா தென்னைடா…” என்றார் பாட்டி.
பாட்டியின் சொல்படி கணக்குப் போட்டால் தாத்தா வைத்த அந்த தென்னை மரத்துக்குக் குறைந்த பட்சம் 70 வயது ஆகியிருக்க வேண்டும். 70 வயதான ஒரு கிழத் தென்னையைச் சாய்க்க முடியாத கஜா புயல், பதினைந்து வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட ஏராளமான தென்னைகளை வேட்டையாடியுள்ளது. இங்கேதான் இயற்கைத் தென்னைக்கும் மரபணு மாற்றப்பட்ட கலப்பின ஹைபிரிட் தென்னைக்கும் இடையேயான வேறுபாட்டை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
**வணிக விதையின் விளைவு**
பொதுவாகவே தென்னை என்பது சில பத்து வருடங்களுக்கு முன்பு வரை நாட்டுத் தென்னை என்ற ஒரே ரகம்தான். நாட்டுத் தென்னை என்றால் என்ன? கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் வரையறையைப் பாருங்கள்:
“நீண்ட வாழ்திறன் கொண்டது. இதன் வயது 80-90 வருடங்கள் ஆகும். பல்வேறு மண் வகைகளில் வளரும் தன்மை கொண்டது. அவை முறையே மணல், சிவப்பு வண்டல் மண் மற்றும் செம்பொறை மண் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரம் வரை வளரும். இது நோய் மற்றும் பூச்சிகளை எதிர்த்து வளரும் தன்மை கொண்டது. இந்த மரங்கள் 15 மீ முதல் 18 மீ வரை (அ) அதற்கும் அதிகமான உயரம் வரை வளரும். நடவு செய்த நாளிலிருந்து 8 முதல் 10 வருடங்களில் பூத்து, காய்க்க ஆரம்பிக்கும். காய்கள் நடுத்தரம் முதல் பெரிய அளவில், கோள வடிவ (பந்து போன்ற) அல்லது நீள வடிவில், பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பழுப்பு நிறம் கலந்து காணப்படும். 6000 தென்னங்காயிலிருந்து ஒரு டன் கொப்பரைத் தேங்காய் பெறப்படுகிறது” என்று நாட்டுத் தென்னையை வரையறுக்கிறது கோவை வேளாண் பல்கலைக் கழகம்.
ஆனால் மனிதனின் வர்த்தக லாபப் புத்திக்கு நாட்டுத் தென்னைகள் உவப்பானவை அல்ல. ஏனெனில் நாட்டுத் தென்னைகள் பயிரிட்டு 10 வருடங்களில்தான் பூக்க ஆரம்பிக்கும், அதன் பின்னரே காய்க்கும். அதனால் வணிகர்களுக்கு லாபமில்லை. பிள்ளையைப் பெற்றவுடனேயே அது வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் என்றால் எப்படி?
தென்னையை நட்டு வைத்துவிட்டு உடனே அண்ணாந்து பார்த்தால் காய்த்திருக்க வேண்டும், அதை இளநீராகவும், தேங்காயாகவும் அறுத்து மார்க்கெட்டுக்கு அனுப்ப வேண்டும். சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற வணிகக் கொள்கையின் விளைவாகத்தான் ஹைபிரிட் தென்னை மரங்கள் அதாவது நெட்டை- குட்டை, குட்டை-நெட்டை ஆகிய கலப்பின தென்னை ரகங்கள் உருவாக்கப்பட்டன. வைத்து மூன்றே வருடங்களில் பூக்கும், பின் காய்க்கும். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மரங்களை வைத்து வளர்த்தால் மிகையான லாபம் கிடைக்கும். இந்தக் காரணங்களுக்காகவே ஹைபிரிட் தென்னை மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.
கஜாவை எதிர்கொள்ள முடியாமல் சாய்ந்து போனவற்றில் பெரும்பாலானவை கலப்பின ஹைபிரிட் தென்னை மரங்கள்தான். நாட்டுத் தென்னைகளும் சாய்ந்திருக்கின்றன. ஆனால் அவற்றின் விகிதம் குறைவு.
**பிராய்லர் தென்னைகள்**
இதுபற்றி நாம் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியிடம் பேசினோம்.
“நாட்டு மரங்களை புயல், வெள்ளம் அதிகமாய் தாக்காது. நாட்டு மரங்கள் புயலில் வீழ்வதுண்டு. ஆனாலும் அவற்றுக்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பலத்த காற்றின் காரணமாக நாட்டுத் தென்னைகள் வீழ்வது மிகக் குறைந்த அளவுதான். பொள்ளாச்சி பக்கத்தில் தென்னை மரங்களை வெள்ளை ஈ கடுமையாக தாக்கும். அதுவும் நாட்டு மரங்களில் குறைவுதான்.
ஆனால் நெட்டை-குட்டை, குட்டை-நெட்டை கலப்பின தென்னை மரங்களைதான் இந்தப் புயல் அதிகமாகத் தாக்கியிருக்கிறது. நாட்டுத் தென்னைகள் நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி காய்க்காது என்பதால் நாமே உருவாக்கிய கலப்பின தென்னை மரங்களை தோப்புகளில் ஆயிரக்கணக்கில் வளர்க்கிறோம். ஒரே உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நாட்டுக் கோழிக்கும், பிராய்லர் கோழிக்கும் உள்ள வேறுபாடுதான் நாட்டுத் தென்னைக்கும், கலப்பினத் தென்னைக்கும். இந்தப் புயலில் பனை மரங்கள் விழாது. ஏனெனில் பனை மரங்களைப் பொறுத்தவரை அது வான்மழையை நம்பி வளரக்கூடிய மரம். அது எந்தப் புயலையும் தாங்கும்.
இதுபற்றிய விழிப்புணர்வைத் தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்துவதற்காக பனை, தென்னை பாதுகாப்புப் பயணத்தை டிசம்பர் 18ஆம் தேதி கோவையில் இருந்து தொடங்கி சென்னையில் முடித்து முதல்வரையும் சந்தித்துக் கோரிக்கை வைக்க இருக்கிறோம்” என்கிறார் கள் இயக்க நல்லசாமி.
தேங்காய் வியாபாரத்துக்காக உருவாக்கப்பட்ட பிராய்லர் தென்னை மரங்கள்தான் கஜா புயலால் அதிக அளவில் சாய்க்கப்பட்டிருக்கின்றன. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு இனியாகிலும் இயற்கைக்கு ஏற்ற, மண்ணுக்கு ஏற்ற நாட்டுத் தென்னைகளை அதிக அளவில் பயிரிட வெகுஜனம் முன் வரவேண்டும். அதற்கு அரசின் வேளாண் கொள்கைகளிலும் மாற்றம் வேண்டும்.
இது கஜா கற்றுத் தரும் முக்கியமான பாடம்…
அடுத்து மின்சார விவகாரத்திலும் கஜா கல்விக் கூடத்தில் பாடங்கள் இருக்கின்றன.
அவற்றை நாளை பார்ப்போம்.
[புயலுக்குப் பின்னும் புயல்: கஜா கவரேஜ்-1](https://minnambalam.com/k/2018/11/20/106)
�,”