`இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்!

Published On:

| By Balaji

எந்திரன் திரைப்படத்துக்கு கதை உரிமை கோரிய வழக்கில், இயக்குநர் ஷங்கர் சாட்சி அளிக்க நேரில் ஆஜராகாத காரணத்தால், அவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யாராய் நடித்த படம் எந்திரன். 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் 2.ஓ என்ற பெயரில் தற்போது தயாராகி வருகிறது.

எந்திரன் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “1996ஆம் ஆண்டு உதயம் என்ற பத்திரிக்கையில் ஜூகிபா என்ற பெயரில் தொடர்கதை எழுதினேன். அந்தக் கதையை என்னிடம் எந்த அனுமதியும் பெறாமல் ஷங்கர் படமாக எடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் காப்புரிமை சட்டப்படி 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இயக்குநர் ஷங்கர், கலாநிதி மாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் மீது வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 8ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது. இயக்குநர் ஷங்கர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், தம்மிடம் கூடுதல் ஆவணங்கள் இருப்பதாகவும் எனவே அதனை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில் அவரின் மேலாளர் ஒரு மனு தாக்கல் செய்தார். ஷங்கர் படப்பிடிப்பு சம்பந்தமாக வெளியூரில் இருப்பதால் வழக்கு விசாரணை தள்ளி வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஏற்கனவே சாட்சிகள் மற்றும் குறுக்கு விசாரணைகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதனைத் தொடர கால அவகாசம் கோருவதால் அதனை ஏற்க முடியாது என தெரிவித்தார்.வணிக நீதிமன்ற சட்டத்தின்படி வழக்கு விசாரணைக்காகக் கால அவகாசம் கோருவதால் இயக்குநர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், இந்தத் தொகையை ப்ளூ கிராஸ் அமைப்பிடம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share