பூட்டான் டைரீஸ் – 4: நிவேதிதா லூயிஸ்
பாரோ நகரம் பாரோ சூ என்ற நதிக்கரையின் இருபுறமும் பரந்து விரிந்திருக்கிறது. பாரோ சூவின் கிளை நதிகளில் ஒன்றின் கரையில் இருந்த எங்கள் ஹோம்-ஸ்டேயை குடும்பத் தலைவி ஒருவர் நிர்வகித்தார். பெரும்பான்மையான பூட்டானின் ஹோம்-ஸ்டேகள் பெண்களால் அல்லது அவர்கள் மேற்பார்வையில் நடத்தப்படுவதால், தனியாகப் பெண்கள் பயணிப்பது பூட்டானில் வெகு சுலபம். காலை உணவை முடித்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினோம்.
முதலில் சென்றது பாரோ அருங்காட்சியகம். பூட்டானின் முக்கிய த்சாங்குகள், அருங்காட்சியகங்களில் நுழைவுக் கட்டணம் உண்டு. சில இடங்களில் சார்க் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தள்ளுபடி உண்டு என்றாலும், பெரும்பாலும் குறைந்தபட்சக் கட்டணமாக 300 ரூபாய் வசூலித்துவிடுகிறார்கள். ஐயையோ, இது நம்ம லிஸ்டலயே இல்லையே என்று புலம்பியபடி அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தோம்.
நம் ஊர் அருங்காட்சியகங்களில் பெரும்பாலும் புகைப்படக் காமிராக்களைக் கட்டணம் கட்டினால் அனுமதிக்கிறார்கள். அங்கே காமிரக்களுக்குத் தடா. காமிராவை லாக்கரில் வைத்துப் பூட்டிவிட்டு, உள்ளே நுழைந்தோம். டா த்சாங்க் என்ற பழையக் கோட்டையில் தேசிய அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. அதில் மராமத்துப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், இந்திய அரசு வழங்கிய நிதியில் 2008ஆம் ஆண்டு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கிவருகிறது மியூசியம்.
**முகமூடிகளின் ராஜ்ஜியம்**
நுழைந்த முதல் அறையிலேயே எண்ணிலடங்காத முகமூடிகள்! கைகள் பரபரக்க, எப்படியாவது குறிப்பெடுக்க வேண்டுமே என்று கைப்பையைத் துழாவித் துண்டு காகிதங்கள், டிக்கெட்டுகளில் குறிப்பு எடுக்கத் தொடங்கினேன். பூட்டானின் சாம் எனப்படும் முகமூடி நடனங்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. திபெத்திய சிம்பல் எனப்படும் கைத்தாளத்திற்கு ஏற்ப ஆடப்படும் இந்த நடனங்கள் தியானத்துக்கு ஒப்பானவை, கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை என்பதால், அவற்றில் பயன்படுத்தப்படும் முகமூடிகளுக்கும் தனி மரியாதை உண்டு.
பெரும்பாலும் பத்ம சம்பவரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பவையாகத்தான் இந்த சாம் நடனங்கள் உள்ளன. நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான யுத்தத்தைக் குறிப்பதால், இந்த முகமூடிகளும் இரு வகையாக உள்ளன. ட்ரமிட்சே ங்கா சாம் என்ற நடனத்திற்குப் பயன்படுத்தப்படும் வண்ண ரிப்பன்களால் அலங்கரிக்கப்பட்ட முகமூடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நடனம் ட்ரமிட்சே என்ற கிழக்கு பூட்டானின் கிராமம் ஒன்றின் ஆண்டு விழாக்களில் ஆடப்படுவது.
ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு இந்த நடனத்தை தன் ‘இன்டாஞ்சிபிள் கல்ச்சுரல் ஹெரிட்டேஜ் ஆஃப் ஹ்யூமானிட்டி’ பட்டியலில் சேர்த்திருக்கிறது. கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக இந்த நடனம் ஆடப்படுகிறது. இவை தவிர 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த துறவி பெமா லிங்பா அறிமுகப்படுத்திய மூன்று வகையான ஜிங்க் நடன முகமூடிகள், ஷோலிங் நடன முகமூடிகள், பார்தோ சாம் நடன முகமூடிகள், குரு ஷெங்கய் நடன முகமூடிகள் என்று அந்த அறை முழுக்க முகமூடிகளின் ராஜ்ஜியம்தான். பைன் மரக் கட்டைகளை இயற்கையாகக் காயவைத்து, செதுக்கி, வண்ணங்கள் தீட்டி இந்த முகமூடிகள் செய்யப்படுகின்றன. துங்கம் (காலனின் வடிவம்), மஹாகாலா (காலன்), அத்சரன் (வளமை), மான், கருடன், பனிச் சிங்கம், புலி, என்று கதைகளுக்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த அறையில் எக்கச்சக்கமாகப் புகைப்படங்கள். பெரும்பான்மையான படங்களில் நேரு, இந்திரா, பூட்டானின் அரச குடும்பத்தினர் ஆகியோர் உள்ளனர். செப்டம்பர் 1958இல் பூட்டான் சென்ற நேரு, அவர்களது ‘கோ’, ‘பெலோ’ எனப்படும் ஆடையை அணிந்து புன்னகைத்தபடி ஒரு படத்தில் நிற்கிறார். மற்றொரு படத்தில் ‘யாக்’ ஒன்றின் மீது அமர்ந்தபடி சிரிக்கிறார் இந்திரா.
**ரசனையான வீட்டு உபயோகப் பொருள்கள்**
இன்னொரு அறையில் பூட்டானின் பாரம்பரியக் கைவினைப் பொருள்கள் உள்ளன. அவர்கள் பயன்படுத்தும் வட்ட வடிவ ‘பாங்க்சங்’ எனப்படும் மூங்கில் தட்டும் மூடியும், சாங்க் எனப்படும் தராசு, சாங்ஷோ என்ற மூங்கில் வடிகட்டிகள், பலங் எனப்படும் மதுக் கிண்ணங்கள், செங்க்தாப் என்ற மது பீப்பாய்கள் , லவாங் என்ற வெண்கல விளக்குகள், கூ மற்றும் த்ரோ என அழைக்கப்படும் செம்புப் பானைகள், செம்புத் தேயிலை கெட்டில்கள் என்று ரசனையாக வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளன.
பூட்டானின் இயற்கை வளங்களை எடுத்துக்காட்டும் காட்சிக்கூடம் ஒன்றில், பெரிய கூக்கல், பிரம்மாண்டமான கரண்டிமூக்கன், மஞ்சள் நிறக் கேனரி வார்ப்லர், மோனல் என்ற வானவில்லின் அத்தனை வண்ணங்களையும் கொண்ட கோழி, பனிச் சிறுத்தை, கரியால் முதலை, சீனப் பாங்கலின் போன்ற விதவிதமான விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் பஞ்சடைத்த உயிர்த் தோற்ற மாதிரிகள் உள்ளன. நாட்டின் இயற்கை எழிலைச் சுட்டும் மாடல் ஒன்றும் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அறையினுள் எப்போதும் ஏதாவது விலங்கு அல்லது பறவையின் ஒலி கேட்குமாறு ஒலி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
அங்கிருந்து வெளிவந்தால், பாரோ நகரின் அழகிய தோற்றம், அங்கு தரையிறங்கும் விமானங்கள் என்று ரம்மியமாக இருக்கிறது. படிக்கட்டில் இறங்குகையில்தான் அந்தப் பெண்ணைப் பார்த்தோம். சிறிய பிளாஸ்டிக் பை ஒன்றில் காய்ந்துபோன புழுக்கள் போன்ற எதோ ஒரு வஸ்துவைக் கடைபரப்பியிருந்தார். விற்பனைக்கு என்று பார்த்ததும் புரிந்துபோனது. “என்ன இது? புழுவா? இதை என்ன செய்ய வேண்டும்?”, என்ற என் கேள்விக்கு, “இதைக் கொண்டு தேநீர் தயாரித்துக் குடிக்கலாம். புழு இல்லை, அது போன்றது…” என்றவர், பின் என்ன நினைத்தாரோ, “ஆமாம், புழுதான்” என்றார்.
அந்தப் புழு – இமாலய வயக்ரா! கோடைப்புல், குளிர்காலப் புழு என்ற பொருள்படும்படி இதை “யார்த்சா கும்பு” என்று அழைக்கிறார்கள் பூட்டான் மக்கள். ஓஃபியோகார்டிகெப்ஸ் சைனென்சிஸ் என்ற பாதிப் புழுவும், பாதி ஃபங்கஸுமான விநோத வளர்ச்சிதான் இது. பூட்டானின் உயர்ந்த மலைகளில் கிடைக்கும் பொக்கிஷமான இந்த வகைக் காளானின் விலை கிலோவுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்! கிராமங்களைக் காலி செய்துவிட்டு, பனி உருகும் வெயில் காலங்களில் இவற்றைக் குடும்பம் குடும்பமாகத் தேடிப் பயணிப்பவர்கள் நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளில் உண்டு. நன்கு வளர்ந்த கோஸ்ட் மாத் என்ற அந்துப்பூச்சியின் லார்வாக்கள் மண்ணில் புதையுண்டு குளிர்காலங்களில் மண்ணைத் துளைத்து வெளிவருகின்றன.
ஆனால், பாவம்! இரண்டு மூன்று நாள்களில் இந்த லார்வாக்கள் உடலில் எப்படியோ ஏறிக்கொண்டுவிடும். ஒரு விதமான ஃபங்கஸ் இவற்றின் சத்தை உயிருடன் உறிஞ்சிக்கொள்கிறது. 2-4 வாரங்களில் இறந்து கூடாகிப்போன லார்வாவின் தலையிலிருந்து புல் போன்ற மைசீலியம் வெளிவருகிறது. கேட்கவே கொடூரமாக இருக்கிறது இல்லையா? கீழ்பகுதி லார்வாக் கூடாகவும், மேல்பகுதி புல் போலவும் தோன்றும் இந்த அதிசய யார்த்சா கும்பு திபெத் பள்ளத்தாக்கின் மிக விலையுயர்ந்த பொருள்! இதுபற்றிய [குறும்படம்](https://youtu.be/8sedh0kV98M) மேலும் பல தகவல்களைத் தருகிறது.
இதன் மருத்துவப் பலன்கள் எதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மாதக்கணக்கில் பகல் இரவாக இதைத் தேடி அலையும் பெரும்கூட்டமும் இதை விற்கும் மார்க்கெட்களும், இடைத் தரகர்களும், இதுதான் வயாகரா என்று நம்பி மோசம்போகும் அப்பாவிகளையும் நினைத்துப் பார்த்தேன். மூட நம்பிக்கையும், சிட்டுக் குருவி லேகியமும், அதை விற்பனை செய்யும் ஹோட்டல், டிவி புகழ் மருத்துவர்களும் உலகின் எல்லா நாடுகளிலும் உண்டுபோல!
தொடர்வோம்…
(கட்டுரையாளர் **நிவேதிதா லூயிஸ்**, சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். எதுவும் யாருக்கும் சொந்தம் இல்லை என்று நம்புபவர். அனைவரும் சரிநிகர் சமமே என்ற கோட்பாட்டைக் கொண்டவர். நாத்திகம் பேசினாலும், வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள் எல்லாவற்றின் வரலாறு மீதும் அளப்பரிய ஆர்வம் உண்டு. எங்கோ, என்றோ தன் எழுத்து ஒருவரை அமைதியாய் அமர்ந்து சிந்திக்கவைக்கும் என்றால், பண்படுத்தும் என்றால், சோர்வுறும் வேளையில் ஒரு துளி தேனாகும் என்றால், அதுவே தன் பெருவெற்றி என்கிறார். தற்போது அவள் விகடன் இதழில் 14 நாள்கள், முதல் பெண்கள் என்ற இரண்டு பத்திகள் எழுதிவருகிறார். வரலாற்றில் பெண்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும்வருகிறார்.)
[பகுதி 1](https://minnambalam.com/k/2019/04/30/10)
[பகுதி 2](https://minnambalam.com/k/2019/05/07/10)
[பகுதி 3](https://minnambalam.com/k/2019/05/07/10)
�,”