தமிழகத்தில் மே 16-ம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் 7 பெண்கள் உள்பட 83 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்தனர். 23 மற்றும் 24-ம் தேதி விடுமுறை தினம். 25-ம் தேதி, திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, ஆர்.கே.நகரில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட ஏராளமானோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். சென்னை, கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையிலும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியிலும் நேற்று முன்தினம் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் முக்கியமானவர்கள்.
நேற்று அதிமுக வேட்பாளர்கள் 226 பேர் மற்றும் அதன் கூட்டணியில் போட்டியிடும் 7 பேர் என மொத்தம் 233 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர, தமிழக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட ஏராளமானோர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இதன்படி, கடந்த 22-ம் தேதி முதல் நேற்று வரை (5 நாட்களில்) தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 3,982 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 3,522 பேரும், பெண்கள் 458 பேரும், சென்னை ஆர்.கே.நகர் மற்றும் மதுரை தெற்கு தொகுதியில் தலா ஒரு திருநர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிகிறது. நாளை வேட்புமனுப் பரிசீலனை நடக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ம் தேதி மதியம் 3 மணிக்கு வெளியாகும்.�,