டெல்லியில் இன்று நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்.
இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசின், முதல் நிதி ஆயோக் கூட்டம் இன்று (ஜூன் 15) டெல்லியில் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தற்போது நிலவிவரும் வறட்சி, விவசாயிகள் பிரச்சினை, மழை நீர் சேகரிப்பு உள்ளிட்டவை குறித்தும் நிதி விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.
மேலும், மாவட்ட மேம்பாட்டுத் திட்டங்கள், வேளாண் வளர்ச்சி, பாதுகாப்பு விவகாரங்கள், முக்கியமாக இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துவது உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல மாநில முதல்வர்களும் நேற்று டெல்லிக்கு சென்றனர். ஆனால் இதனை பயனற்றக் கூட்டம் என்று விமர்சித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூட்டத்தையும் புறக்கணித்துவிட்டார். இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூன் 14) சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன்சென்றனர்.
கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுவார் என்றும், அப்போது தமிழகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய நிதி தொடர்பாக வேண்டுகோள் விடுப்பார் என்றும் டெல்லி வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சினை இருந்துவரும் நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கமாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “டெல்லியில் நாளை நடைபெறவுள்ள நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள செல்கிறேன்; பல்வேறு கோரிக்கைகளையும் உரிமைகளையும் பெற்று தருவோம்” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”