�தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வை, சுமார் 6.22 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆய்வாளர், உதவி பிரிவு அலுவலர், சிறைத் துறை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவுச் சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 2 பதவிகளுக்கான 1,199 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. செப்டம்பர் 9ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பித்து வந்தனர் தேர்வர்கள்.
இன்று (நவம்பர் 11) காலையில் இந்த குரூப் 2 தேர்வு நடக்கவுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 2,268 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 6.22 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 136 பேர் ஆண்கள்; 2 லட்சத்து 72 ஆயிரத்து 357 பேர் பெண்கள். 10 பேர் மூன்றாம் பாலினத்தவர். இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை இத்தேர்வு நடைபெறும். சென்னையில் மட்டும் 248 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு கண்காணிப்புப் பணியில் மட்டும் சுமார் 6,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணுச் சாதனங்களுக்கு அனுமதியில்லை. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.�,