‘பிரதமர் மோடியை நான் இன்னொரு காந்தியாக பார்க்கிறேன். காந்தியைப் போலவே பல தலைமுறைக்கு உத்வேகம் அளிப்பவராக மோடி உள்ளார்’ என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று ஜூலை 13ஆம் தேதி தேசிய காந்தி அருங்காட்சியக முன்னாள் இயக்குநர் ஒய்.பி.ஆனந்த் எழுதிய உப்பு சத்தியாக்கிரகம் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, “இன்று நம்மிடையே மற்றொரு காந்தியைப் போல நம் பிரதமர் மோடி இருப்பது அதிர்ஷ்டமாக உள்ளதுடன், நம் தலைமுறைக்கு உத்வேகமாகவும் திகழ்கிறது. உப்பு சத்தியாக்கிரகம் என்பது வெறும் உப்பு பற்றியது மட்டுமல்ல; தலைமுறையை வேகமூட்டக்கூடிய செயலுமாகும். இதைத்தான் மோடி தற்போது செய்து வருகிறார். நாட்டின் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற ரீதியில் மோடி இயங்குகிறார். பிரதமரின் கனவு காந்தியின் கனவை நிறைவேற்றுவது போன்றதாகும்.
இந்த உப்பு சத்தியாகிரகம் பற்றிய நூல் இந்தியாவுக்கு மிக முக்கியம் வாய்ந்த ஒரு நூலாக உள்ளது. குறிப்பாக உலகில் மனிதநேயம் தேவைப்படும் இந்த காலத்தில் இப்படி ஒரு புத்தகம் வெளிவருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.�,