தேர்தல் வெற்றி தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதியையும் கைப்பற்றியது. அத்தோடு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் 13 இடங்களைக் கைப்பற்றியது. தேர்தல் வெற்றி தொடர்பாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இந்த வெற்றியை கலைஞர் நினைவிடத்தில் சமர்ப்பிக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
வெற்றி தொடர்பாக தொண்டர்களுக்கு இன்று (மே 25) மடல் எழுதியுள்ள ஸ்டாலின், “ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் திமுக கூட்டணி ஈர்த்திருக்கிறது. திராவிட இயக்கத்தை அழிக்க, எத்தனை வித்தைகள் செய்தாலும் எத்தனை பேர் குட்டிக்கரணம் போட்டாலும், இங்கே எடுபடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் தனிப் பெரும் தீர்ப்பு.தமிழகம்-புதுச்சேரியில் திமுக கூட்டணியும் 38 மக்களவைத் தொகுதிகளை வென்றிருக்கிறது.22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களைக் கழகம் கைப்பற்றியுள்ளது மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் திமுக பெறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “தலைவர் கலைஞர் அவர்களின் தலைவர் பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தலைவர் தந்தை பெரியார் என திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களின் நினைவிடங்களில் வணக்கம் செலுத்தி, திமுக கூட்டணிக்கு மக்கள் அளித்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்கியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக்குரலாக திமுக ஓங்கி ஒலிக்கும்.மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட திமுக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கபூர்வ அரசியலுக்கான காலம். மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது. அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதால் அதற்காக திமுக எம்.பி.க்கள் அனைவரும் சென்னையிலேயே தங்கியிருக்கிறார்கள். இதனையடுத்து காலை ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கலைஞர் நினைவிடத்துக்கு ஊர்வலமாகச் சென்று மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனையடுத்து அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலுக்குச் சென்றவர்கள், பெரியார் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.�,”