பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ஆக உருவெடுக்கும் என்ற சசிதரூரின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரளாவின் கொச்சியில் ‘இந்திய ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள்’ என்ற தலைப்பில் நேற்று(ஜூலை 11) நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுர மக்களவை உறுப்பினருமான சசி தரூர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,பாரதிய ஜனதா கட்சி,மீண்டும் மக்களவையில் பெரும்பான்மை பெறுமானால் இந்தியா,என்பது ‘இந்து பாகிஸ்தானாக’ உருவெடுக்கும்,என்று கூறியுள்ளார்.
“மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி,பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களையும் ஆண்டு வருகிறது. வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பலத்தை அக்கட்சி பெறுமானால்,மேலும் பல நெருக்கடிகளை இந்திய ஜனநாயகம் சந்திக்கும். அவர்களின் தலைவர் வீர சர்வார்கரின் கனவான இந்திய அரசியலமைப்பை மாற்றி புதிதாக எழுதுவது, இந்து பெரும்பான்மையை நிலைநிறுத்தி சிறுபான்மையினர் உரிமைகளை ஒடுக்கி இந்து ராஷ்டிரத்தை நிறுவுதல் ஆகியவையே அவர்களின் நோக்கம்.
இதனால், இந்திய தேசம் ”இந்து பாகிஸ்தானாக” உருவாகும். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல்,நேரு போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் இதற்காகப் போராடவில்லை ” என்று விமர்சித்திருந்தார்.
சசி தரூரின் இக்கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் கூறியதாவது, “சசி தரூர், மீண்டும் ஆட்சிக்கு வர இத்தகைய மாயதோற்றத்தை மக்களிடம் உருவாக்குகிறார். மேலும் காங்கிரஸ் கட்சிதான் அரசியலமைப்பு சட்டத்தையும் மற்றும் குடிமக்களின் உரிமைகளையும் நசுக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி, “சசி தரூர் கூறும் இந்து பாகிஸ்தான் என்றால் என்ன? அதற்கு என்ன அர்த்தம்? அவர் பாகிஸ்தானுக்கு எதிரானவரா? அல்லது அவர் பாகிஸ்தானை சமாதானப்படுத்த முயல்கிறாரா? இந்திய பிரதமர் மோடியைப் பதவியில் இருந்து நீக்க பாகிஸ்தானிடம் உதவிக் கோருகிறார் சசி தரூர்.
அவருக்கு பாகிஸ்தானிய பெண் தோழிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் உளவாளிகள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சசி தரூர் மீது பிரதமர் மோடி இரக்கம் காட்ட வேண்டும் என்றும், அவருக்கு எதுவும் மருத்துவ உதவி தேவையா என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
எனினும் தனது கருத்தில் தவறில்லை என்றும் இது தொடர்பாக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் சசி தரூர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
�,