இந்துக்கள் தொகுதியில் போட்டியிட காங்கிரஸுக்கு பயம்: மோடி

Published On:

| By Balaji

இந்துக்கள் அதிகம் உள்ள தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர்களுக்கு பயமாக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி ராகுல் காந்தியை மறைமுகமாகச் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், தென்னிந்தியாவிலும் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து கேரள மாநிலம் வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிடுவதாக நேற்று (மார்ச் 31) காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதனை பாரதிய ஜனதா கட்சியினரும், கேரள இடதுசாரிகளும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் நோக்கத்தோடு ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடவில்லை, இடதுசாரிகளை எதிர்த்துதான் இங்கு போட்டியிடுகிறார் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் நேற்று கூறுகையில், “கேரளாவில் இடதுசாரிகளுக்கும், காங்கிரஸூக்கும்தான் போட்டி என்பது அனைவருக்கும் தெரியும். பாஜகவுடன் இருவருக்கும் போட்டியில்லை. ராகுல் காந்தி பாஜகவுக்கு எதிராகப் போட்டியிட வேண்டும். இப்போது வயநாட்டில் இடதுசாரிகளுக்கு எதிராகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரை வயநாட்டில் தோற்கடிப்போம்” என்றார்.

கேரள இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுனீர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல பாஜக தரப்பில் பாரத் தர்மசேனா தலைவர் துஷர் வெல்லப்பள்ளி போட்டியிடவுள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் போட்டியிடுவதில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு பயம் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மோடி, “இந்துக்கள் வாக்கு வங்கி அதிகமாக உள்ள தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் தலைவர்களுக்கு பயம் வந்துவிட்டது. இந்து தீவிரவாதிகள் என்ற சொல்லாடலைக் காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்தினர். இது அமைதியை விரும்பும் இந்துக்களை தீவிரவாதிகளாக சித்தரித்தது. இந்து பயங்கரவாதம் நடந்ததற்கான சிறு ஆதாரமாவது இங்கு உண்டா? இந்துக்களை அவமதித்ததற்காக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தேர்தலில் தண்டிக்க மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அதனால் இப்போது அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது” என்றார். வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவித்த மறுநாளே மோடி இவ்வாறு பேசியிருப்பது ராகுல் காந்தி மீது மறைமுகமாக வைக்கும் குற்றச்சாட்டாகவே உள்ளது.

மத ரீதியான மோடியின் இக்கருத்து தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share