இந்துக்களுக்கு எதிரியா? ஊடகங்களை சாடும் ஸ்டாலின்

Published On:

| By Balaji

தன் மனைவி துர்கா கடவுள் நம்பிக்கையுடையவர் என்றும், அவரை கோயிலுக்குப் போகக் கூடாது என்று தான் ஒருபோதும் தடுத்ததில்லை என்றும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அரக்கோணம் சோளிங்கரில் இன்று (ஏப்ரல் 1) நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சிலபேர் இன்றும் பொய்ப்பிரச்சாரம் செய்துகொண்டிருக்கின்றார்கள் என்றும் ஜெகத்ரட்சகனைப் பார்த்த பிறகுமா அவர்கள் அப்படி சொல்கிறார்கள்?” என்றும் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பேசினார்.

”திட்டமிட்டு சில பத்திரிகைகளும், ஊடகங்களும் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ நாங்கள் இந்துக்களின் எதிரிகள் போல ஒரு தோற்றத்தை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று தமிழ்நாட்டு பத்திரிகை நிறுவனம் ஒன்றைக் குறிப்பிட்டு முக.ஸ்டாலின் கடுமையாகச் சாடிப் பேசினார். மேலும், “ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்றுதான் அண்ணா சொன்னார். நாங்கள் என்றைக்கும் ஆண்டவனுக்கு எதிராக இருந்தவர்கள் அல்ல. நாங்கள் ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, ஆண்டவன் எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதுவே எங்களுக்கு போதும் என்று கலைஞர் அடிக்கடி சொல்வார்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

”1953ஆம் ஆண்டில் நான் பிறந்த காலத்தில் பராசக்தி திரைப்படம் வெளியிடப்பட்டது. சிவாஜி கணேசன் முதன்முதலாகக் கதாநாயகனான நடித்தது அந்தப் படத்தில்தான். கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்று அந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் எங்களுடைய கொள்கை” என்ற ஸ்டாலின் தனது மனைவி துர்கா கடவுள் நம்பிக்கை உடையவர். தினமும் கோயிலுக்குச் செல்வார். அதனைத் தான் தடுத்ததில்லை என்று சொன்னார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தத் தொகுதியின் வேட்பாளர் உங்களிடம் ஓட்டு கேட்டபோது என்னுடைய துணைவியாரைக் குறிப்பிட்டுப் பேசினார். என் துணைவியார் இன்றைக்கும் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறார். ஒருநாள் தவறியதில்லை. தினமும் செல்வார். என்றைக்காவது அவர் கோயிலுக்குப் போகக்கூடாது என்று அவரை நான் தடுத்திருக்கிறேனா? அது அவருடைய விருப்பம்” என்றார்.

திமுக இந்துக்களின் எதிரி என்று பரப்பும் பொய்ப் பிரச்சாரத்தை நம்புவதற்கு நாட்டு மக்கள் நிச்சயமாகத் தயாராக இல்லை என்ற ஸ்டாலின், “ எல்லா மதத்துக்கும் நான் பாதுகாவலனாக இருப்பேன். என்னுடைய கட்சி துணை நிற்கும். ஜாதி, மதம் பார்க்க மாட்டோம். எந்த மதத்துக்குமே திமுக எதிரான கட்சியல்ல என்று நான் திமுக தலைவராகப் பொறுப்பேற்றபோது பொதுக்குழுவில் அழுத்தந்திருத்தமாக பேசியிருக்கிறேன்” எனவும் கூறினார்.

”எனவே நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று இன்னும் பொய்யான செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிற ஊடகங்களைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவு இருக்கிறது. அந்த செய்திகளைப் பற்றி நாங்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை” என்று கூறி முடித்தார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share