இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தபால் துறை தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்குத் தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்திய தபால் துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல் தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும். இரண்டாம் தாளுக்கான வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்து அந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை உதவி தலைமை இயக்குநர் சி.முத்து ராமன், அனைத்து தலைமை தபால் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ், இந்தி ஆங்கிலம், என மூன்று மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை போஸ்ட்மேன் உள்ளிட்ட 1000 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு தமிழக தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2015ல் நடைபெற்ற தபால் துறை தேர்வில் பிகார் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தில் அதிகளவு தேர்ச்சி பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தமிழக மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், ”தபால் துறை தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும். மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்கள் சேருவதற்கான கதவை தாழிட்டு மூடப்படுவது கண்டனத்துக்குரியது. தென்மாநிலத்தவர்கள் யாரும் இந்த பணியில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். தமிழில் தேர்வு நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
”தபால் துறை தேர்வுகள் இந்தி , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே எழுத முடியும். மாநில மொழிகளில் நடைபெறாது என்ற மத்திய தொலைத்தொடர்பு துறையின் அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும்” என்று மக்களவையில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.
”இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், தபால் துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும். தமிழே தெரியாத அவர்களைத் தமிழகத்தில் பணியமர்த்தினால் எவ்வாறு பணி செய்வார்கள்? தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து கடிதங்களை வழங்குவர்? இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது. இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவை இந்தி நாடாக கட்டமைக்கும் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் பாஜக அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது என்று கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ”மத்திய அரசுத் துறைகளில் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் வடமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வாரி வழங்கும் பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது, இது நியாயப்படுத்தவே முடியாத அக்கிரமச் செயலும் ஆகும். தபால் துறை பணியாளர்கள் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே வினாத்தாள் இருக்கும் என்பதை மாற்றி, தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வினாத்தாள் இடம்பெறச் செய்ய வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.�,”