]
எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா விரைவில் 50ஆவது இடத்துக்குள் முன்னேறும் என்று அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான பட்டியலை உலக வங்கி அண்மையில் வெளியிட்டது. அதில் சென்ற ஆண்டில் 100ஆவது இடத்தில் இருந்த இந்தியா, அதிரடியாக 23 இடங்கள் முன்னேறி 77ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி, வாராக் கடன் மீட்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது போன்ற காரணங்களால் இந்த வளர்ச்சி சாத்தியமானதாக உலக வங்கி தெரிவித்திருந்தது. இப்பட்டியலில் இந்தியா விரைவில் 50ஆவது இடத்துக்குள் முன்னேறும் என்று மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 31ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் பேசுகையில், “சொத்துகளைப் பதிவுசெய்வதற்கு ஆகும் காலம், தொழில் தொடங்குவது, திவால் மற்றும் வரி முறை, ஒப்பந்தங்கள் போன்றவற்றில் இன்னும் முன்னேற்றம் தேவை. இவற்றுக்கான மேம்பாட்டுப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அதன் பயன்களை எதிர்காலத்தில் நம்மால் காண முடியும். எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் 50 இடங்களுக்குள் முன்னேறுவதே நமது அரசின் இலக்காகும். மேற்கூறிய அம்சங்களில் அதிகக் கவனம் செலுத்தி, தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தினால் இலக்கை அடைவது எளிதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.�,