நடப்பு 2016-17 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதமாக குறையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.6 சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளதாக கணித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான பணமதிப்பழிப்பு அறிவிப்பு இந்திய பொருளாதாரத்தை பாதித்துள்ளதால், அது மேலும் குறைந்து 7 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘7 சதவிகித வளர்ச்சிதான் என்றபோதிலும், உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கும். சீனாவை (6.5) விட அதிக வளர்ச்சி விகிதத்தை இந்தியா பெற்றுள்ளது. தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகளால் வரும் நாட்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கணிசமாக உயரும். அடுத்த நிதி ஆண்டில் 7.6 சதவிகிதமாகவும், அதற்கடுத்த நிதி ஆண்டில் 7.8 சதவிகிதமாகவும் உயரும் வாய்ப்புள்ளது. அதேபோல சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2.3 சதவிகிதத்தில் இருந்து 2.7 சதவிகதமாக உயரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO) வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.6 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக குறையும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.�,