காஷ்மீர் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, இந்தியத் திரைத்துறையில் பணியாற்ற பாகிஸ்தான் கலைஞர்களுக்கு அனைத்திந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
புல்வாமாவில் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, இந்திய பாதுகாப்புப்படை வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தனர்.
இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, ‘வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்வது’ உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அனைத்திந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “தீவிரவாத தாக்குதலில் பலியான எங்களது வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
மேலும், பாகிஸ்தான் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் இந்தியத் திரைத்துறையில் பணியாற்றத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி யாரேனும் நடித்தால், சம்மந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,”