இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு: மார்க்சிஸ்ட் புதிய அறிவிப்பு!

Published On:

| By Balaji

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம், புதுடெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவனில் அக்டோபர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் காஷ்மீர் விவகாரம், தேசிய குடிமக்கள் பதிவேடு சர்ச்சை, பொருளாதார மந்தநிலை மற்றும் மகாராஷ்டிரம், ஹரியானா சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில், ஜம்மு காஷ்மீரில் தகவல் தொடர்புகள், மக்களின் இயல்பு வாழ்க்கை, சிவில் உரிமைகள் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “வரும் அக்டோபர் 17, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான 100ஆவது ஆண்டாகும். இதை ஓராண்டுக் காலத்துக்குக் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்தியாவின் இடதுசாரி இயக்கங்களின் முக்கியமானவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து 1967ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சி எப்போது தொடங்கப்பட்டது என்பது குறித்து இரண்டு கட்சிகளுக்கும் இரு வேறு கருத்துகள் உள்ளன. 1925 டிசம்பர் 26 என்று தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. எனினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இக்கட்சி சோவியத் ஒன்றியத்தில் 1920இல் நிறுவப்பட்டதாகச் சொல்கிறது.

இடதுசாரி இயக்கத்தைப் பலப்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைய வேண்டும் என்ற யோசனை சமீப காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, மார்க்சிஸ்ட் கட்சியால் தற்போது கொண்டாடப்படவுள்ள நிலையில், இரு கட்சிகளின் இணைப்புக்கான சூழல்களும் கூர்மைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share