[இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!

Published On:

| By Balaji

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரு போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மிகமுக்கியமான 4ஆவது போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், எஞ்சிய போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில், முதலிரண்டு போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த தமிழக வீரர் முரளி விஜய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். லார்ட்ஸ் டெஸ்டில் மட்டும் விளையாடியிருந்த சுழல் வீரர் குல்தீப் யாதவும் நீக்கப்பட்டுள்ளார். இவர்களுக்குப் பதிலாக 18 வயதான ப்ரித்வி ஷா, 24 வயதான ஹனுமா விஹாரி ஆகிய இருவரும் இந்திய அணியில் புதிதாக இணைந்துள்ளனர்.

இந்திய ஏ அணிக்காக விளையாடிவரும் ப்ரித்வி ஷா, முதல் தரப் போட்டிகளில் 7 சதம், 5 அரைசதம் உட்பட 56.72 என்ற சராசரியைக் கொண்டுள்ளார். கடைசியாக அவர் பங்கேற்ற ஆட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 188 ரன்களும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 62 ரன்களும், தென் ஆப்ரிக்க ஏ அணிக்கெதிராக 136 ரன்களும் எடுத்துள்ளார்.

அதேபோல் இந்திய ஏ அணியின் மூன்றாம் நிலை வீரரான ஹனுமா விஹாரியும் முதல் தரப் போட்டிகளின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இம்மாதத் தொடக்கத்தில் தென் ஆப்ரிக்க ஏ அணியுடனான ஆட்டத்தில் ஹனுமா 148 ரன்கள் எடுத்திருந்தார். அதுமட்டுமின்றி ரஞ்சி கோப்பைத் தொடரில் ஆந்திர அணியின் கேப்டனான ஹனுமா விஹாரி 63 போட்டிகளில் விளையாடி 59.79 சராசரியைக் கொண்டுள்ளார். மேலும், ஒரே இன்னிங்ஸில் 302 ரன்கள் சேர்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார்.

**எஞ்சிய டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்:**

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ப்ரித்வி ஷா, சத்தேஸ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி, ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்த்துல் தாக்கூர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share