இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிவந்த அனில் கும்ப்ளே நேற்று (ஜூன் 20) தனது பணியை ராஜினாமா செய்தார். அவரின் ஓராண்டு கால ஒப்பந்தம் நேற்றோடு முடிவடைந்தது. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை நீடிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் நேற்று திடீரென கும்ப்ளே தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். கும்ப்ளேவின் விலகல் குறித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் நிகில் சோப்ரா கூறுகையில் **அனில் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியது துரதிர்ஷ்டவசமானது. எத்தனைப் பேர் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், கும்ப்ளேவின் இடத்தை நிரப்ப சேவாக் தகுதியானவர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே சிறப்பாக செயல்பட்டு வந்தவர். அதேபோல் சேவாக்கும் சிறப்பான தலைமையைச் செயல்படுத்துவார். சேவாக் போன்ற முன்னணி வீரர்கள்தான் அணியை நடத்தத் தேவையானவர்கள்** என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சேவாக்குடன், டாம் மோடி, ரிச்சர்ட் பைபஸ், லால்சந்த் ராஜ்பூட், டோட்ட கணேஷ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ரிச்சர்ட் பைபஸ் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பித்துள்ள ஐந்து வீரர்களில் சேவாக்கைத் தவிர மற்ற அனைவரும் சிறந்தப் பயிற்சியாளர்களாக நிரூபித்தவர்கள். சேவாக் கடந்த ஆண்டு முதல்தான் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இந்திய அணியின் முன்னாள் வீரர் என்பதால் அணியுடன் ஒன்றி சிறப்பான பயிற்சிகளை வழங்க சேவாக் தகுதியானவர் என்பதால் அவருக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.�,