�வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியக் குடும்பங்கள் இந்தியாவுக்குச் சுற்றுலா மேற்கொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் ஒவ்வொரு இந்திய குடும்பங்கள் மூலமாக இந்தியர் அல்லாதவர்களும் அதிக அளவில் இந்தியாவுக்கு சுற்றுலா வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஹூஸ்டன் ஹவ்டி மோடி நிகழ்ச்சிக்குப் பின், நேற்று (செப்டம்பர் 23) காந்தியடிகள் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டிய மோடி, “எனக்காக நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். உங்களால் முடியும். இது சிறிய வேண்டுகோள்தான். ஒவ்வொரு ஆண்டும், உங்கள் மூலமாக குறைந்தபட்சம் இந்தியர் அல்லாத ஐந்து வெளிநாட்டுக் குடும்பங்களாவது இந்தியாவுக்குச் சுற்றுலா வர வேண்டும். இதுபற்றி நீங்கள் உங்களுக்குள் ஆலோசித்து ஒரு நல்ல முடிவெடுங்கள். இந்த காந்தியடிகள் அருங்காட்சியகமானது ஹூஸ்டனில் மதிப்புமிக்க கலாச்சார மைல்கல்லாக இருக்கும். இந்தத் திட்டத்துடன் சில காலம் நானும் இணைந்து செயல்பட்டேன். காந்தியடிகளின் சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியில் பரப்புவதற்கு நிச்சயம் இந்த அருங்காட்சியகம் உதவிகரமாக அமையும்” என்று தெரிவித்தார் மோடி.�,