தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் 8.39 கோடி வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டிருப்பதாக, மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்வாச் பாரத் அபியான் என்ற திட்டத்தை, மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த நான்காண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது. “கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சாலைகள் சுத்தமாக இருக்க வேண்டும். திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை சர்வதேசச் சுகாதார மாநாட்டை மத்திய அரசு நடத்தவுள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்த மாநாடு தொடர்பான விளக்கக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 14) டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகச் செயலாளர் பரமேஸ்வரன் ஐயர், கிராமப்புறச் சுகாதார மேம்பாடு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கினார்.
“தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 8.39 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சுமார் 4.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லா கிராமங்களாக மாறியுள்ளன. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியதில் இருந்து கிராமப்புறச் சுகாதார மேம்பாடு அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் 550 மில்லியன் மக்கள் திறந்தவெளிக் கழிப்பிடத்தைப் பயன்படுத்திய நிலை இருந்தது. தற்போது, அது 150 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது” என்று தெரிவித்தார்.�,