ஒரு பொருளாதாரம் வேகமாக வளரும்போது, தேசத்தின் மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு குறைந்து நவீனத்தின் அடையாளமாகக் கருதப்படும் தொழிற்துறை மற்றும் சேவைத்துறையின் பங்கு அதிகரிக்கும். இந்த துறைசார்ந்த மாற்றம் ஏற்படும்போதே, உழைப்புப் படையில் பலர் விவசாயம் அல்லாத தொழில்களை நோக்கி செல்லத் தொடங்கிவிடுவார்கள் என்பதற்கு வரலாற்றில் போதிய சான்றுகள் உள்ளன. இந்தியா வேகமாக வளர்கிறது என்பது உண்மையானால் இந்த மாற்றம் இந்தியாவிலும் நடந்திருக்க வேண்டும் அல்லவா?
விவசாயம் அல்லாத துறைகளில் வேலைவாய்ப்புகள் என்று பார்த்தால், கட்டுமானப் பணிகளில்தான் (construction work) அதிகமான எண்ணிக்கையில் வேலையாட்கள் அமர்த்தப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2004-2011 காலத்தில் பொருளாதாரம் வளர்ந்த வேகத்தை விட கட்டுமானத் துறை வேகமாக வளர்ந்தது. நாட்டின் மொத்த வேலைகளில் தொழிற்துறையின் பங்கு கடந்த முப்பதாண்டுகளாகவே 12-13 விழுக்காடுதான்.
வேலைகளை உருவாக்குவதில் பத்தே ஆண்டுகளில் கட்டுமானத்துறை, தொழிற்துறையை எட்டிப்பிடித்துள்ளது. இன்று இத்துறை 5 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. ஆனால் இந்த கட்டுமான வேலைகள் நிரந்தர வேலைகள் அல்ல என்பதையும், தொழிலாளர் பாதுகாப்பை எவ்வகையிலும் உறுதி செய்யாத ஒரு துறை கட்டுமானம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அப்படியானால், தொழிற்துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. தொழிற்துறையில் அமைப்பு சார்ந்த ஆலைகள், அமைப்பு சாராத ஆலைகள் என இரு பிரிவு உள்ளது. 1983 முதல் 2004 வரை, தொழிற்துறையில் உருவாக்கப்பட்ட வேலைகளில் பெரும்பான்மையானவை அமைப்பு சாரா ஆலைகளில்தான் ஏற்பட்டன. இந்த போக்கு 2004 க்குப் பின் மாறியிருக்கிறது.
2004-2011 காலத்தில், தொழிற்துறை வேலைகள் அமைப்புசார்ந்த ஆலைகளில்தான் பெருகியது. ஆனால், 2000-2014 காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு சார்ந்த ஆலை வேலைகளின் வளர்ச்சியில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் (contract workers) பங்கு 50 விழுக்காடு. 2017இல் அமைப்பு சார்ந்த ஆலைகளில், ஒப்பந்த மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் (informal workers) பங்கு 30 விழுக்காடு. இவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியமோ, சமூகப் பாதுகாப்புப் பயன்களோ கிடையாது.
உழைப்புப் படையில் இன்னும் 47 விழுக்காடு மக்கள், தேச உற்பத்தியில் வெறும் 18 விழுக்காடு பங்கைக் கொண்ட வேளாண்துறையில்தான் இருக்கிறார்கள். இத்துறையில் உற்பத்தித் திறனையும் வருமானத்தையும் பெருக்கி, தொழிலாளர்களை மற்ற துறைகளுக்கு மடைமாற்றம் செய்வது இந்தியப் பொருளாதாரத்தை எதிர்நோக்கி இருக்கும் சவால் என்பது உண்மைதான். ஆனால், தொழிற்துறையில் உருவாக்கப்படும் வேலைகள் தரமானவையாக இருப்பதை உறுதி செய்வது அதைவிட மிகப்பெரிய சவால்.
�,