ந. ரகுநாத்
உலக சந்தையில் போட்டி போடும் அளவுக்கு இந்தியாவின் தொழிற்துறை வளராமல் இருப்பதற்குக் காரணம், அதன் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களே (Labour Laws) என்று இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி ஆய்வு செய்யும் அறிவுஜீவிகள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருவதை நாம் பார்க்க முடிகிறது. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர கொண்டுவரப்பட வேண்டிய முக்கிய சீர்திருத்தங்களில் தொழிலாளர் நலச் சட்டங்களில் ஏற்படுத்த வேண்டிய சட்டத்திருத்தங்களே மிக முக்கியமானவை என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது. அதாவது, தொழிலாளர் சந்தையில் நெகிழ்வுத்தன்மை இல்லாததே தொழிற்துறை வளர்ச்சியை பாதிக்கிறது என்றும், வேளாண் பொருளாதாரத்தில் இருந்து தொழில்மயமான பொருளாதாரமாக இந்தியாவில் ஓர் அமைப்பு சார்ந்த மாற்றம் ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது, இறுக்கமான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களே என்றும் சொல்லப்படுகிறது. இந்த வாதங்கள் எந்த அளவுக்கு உண்மை என்று இந்தக் கட்டுரையில் அலசுவோம்.
தொழிலாளர் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பு முதலாளிகளுக்கு இருப்பதால், அவர்களின் உற்பத்திச் செலவு அதிகமாகிறது; அதனால் குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்து உலக சந்தையில் போட்டிபோட்டு அவற்றை விற்க முடியாமல் போகிறது. இதன் காரணமாகவே, இந்திய மற்றும் அந்நிய மூலதனத்துக்குத் தொழிற்துறையில் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் ஆலைகளைத் தொடங்க ஊக்கம் இல்லாமல் போகிறது. ‘இந்தியாவில் மூலதனம் – தொழிலாளர் உறவை நெறிப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு இருப்பதால், அதன் இடையீடுகள் அதிகமாக உள்ளன. இந்த இடையீடுகள் தொழிற்துறையின் உற்பத்தித் திறனை பாதிக்கிறது. ஆகவே, இந்த இடையீடுகளை அரசு குறைத்துக்கொண்டால் உற்பத்தியில் மூலதனத்தின் சக்தி ஓங்கும்; அதன் விளைவாக உற்பத்தித் திறனும் பெருகும்’ என்பதே பொருளாதாரத்தில் அரசின் பங்கைக் குறைப்பதற்கான அடிப்படை வாதமாக இருக்கிறது.
**மூலதனம் – தொழிலாளர் உறவுகளில் அரசின் இடையீடுகள்**
தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை என்று உழைக்கும் மக்களோடு அரசியல் சாசனத்திலேயே அரசு ஒரு தார்மிக ஒப்பந்தம் போட்டது; பல தொழிலாளர் நலச் சட்டங்களையும் அரசு இயற்றியது. அதன் விளைவாக, மூலதனம் – தொழிலாளர் உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளைத் தன்னுடைய இடையீடுகள் மூலம் தீர்த்துவைக்கும் ஜனநாயகப் பொறுப்பை அரசு ஏற்றுக்கொண்டு செயல்பட்டது. மேலும், பெருமுதலாளிகள், பெருநிறுவனங்கள் கைகளில் நாட்டின் பொருளாதார வளங்களும் சொத்துகளும் குவியாமல் இருப்பதைத் தடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு அவர்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில், தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய அம்சமாக உருவெடுத்தது.
ஆனால், இதன் காரணமாக இரண்டு பெரும் பாதகங்கள் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. முதலாவதாக, தொழிலாளர் நலனைப் பாதுகாப்பதாகச் சொல்லி, முதலாளிகளைத் தொடர்ந்து தொல்லை செய்யும் வகையில் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது என்னும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. முதலாளிகள் சட்டங்களை மதித்துச் செயல்படுகிறார்களா என்று சோதனை செய்ய அடிக்கடி தொழிலாளர் நல அதிகாரிகளை (labour inspectors) அரசு அனுப்பியதால், அவர்களைச் சமாளிக்க முதலாளிகள் லஞ்சம் கொடுக்க நேர்ந்தது. இதுபோன்ற திடீர் சோதனைகளில் இருந்து தப்பிக்க, அதிகாரம் படைத்த பெருமுதலாளிகள், உயர்நிலை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு ரகசிய ஒப்பந்தங்கள் போட நேர்ந்தது. இந்த அமைப்புக்கு “இன்ஸ்பெக்டர் ராஜ்” எனும் பெயர் வழங்கப்பட்டது.
இரண்டாவதாக, முறைசார்ந்த பெரும் நிறுவனங்களை (formal enterprises) மட்டுமே தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களுக்கு உட்படுத்தியதால், முறைசாரா சிறு மற்றும் குறு நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. முறைசார்ந்த நிறுவனங்களில் வேலை செய்தால் மட்டுமே நிரந்தர வேலைக்கான உத்தரவாதம், குறைந்தபட்ச கூலி மற்றும் ஓய்வூதியம், சுகாதாரக் காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்புப் பயன்களை சட்டப்படி கேட்டுப் பெற முடியும். இதன் விளைவாக, தொழிலாளர் சங்கம் வழியே அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் (organized workers) மற்றும் எந்த உரிமைகளும் இல்லாத அணி திரட்டப்படாத தொழிலாளர்கள் (unorganized workers) என்று நாட்டின் உழைப்புப் படையில் ஒரு பிளவு ஏற்பட்டது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கிய 1990களுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, முறைசார்ந்த அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களின் பங்கு 10 விழுக்காட்டைத் தாண்டியதில்லை. ஆக, தங்களுடைய வேலைக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத, தங்களுடைய நலனை உறுதிசெய்யும் சட்டங்கள் ஏதும் இல்லாத தொழிலாளர்களே இந்நாட்டில் பெரும்பான்மையினர்.
யதார்த்தம் இதுவாக இருக்கும்போது, இந்த 90 விழுக்காடு முறைசாராத் தொழிலாளர்களின் (informal sector workers) வேலை, நலனைப் பாதுகாக்கும் முயற்சிகளை எடுப்பதுதானே ஒரு மக்கள் நல அரசின் கடமையாக இருக்க வேண்டும்? இதற்கு முற்றிலும் மாறாக, மீதம் இருக்கும் பாதுகாப்புகளையும் சட்டத் திருத்தங்கள் வழியே நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்று சொல்லுபவர்களின் குரல்களே உரக்கக் கேட்கின்றன. ‘வேலைப் பாதுகாப்பும் குறைந்தபட்ச கூலியும் இருப்பதால்தான் தொழிலாளர்கள் குறைவான உற்பத்தித் திறனோடு இருக்கிறார்கள். மேலும், பொருளாதாரத்தில் கிராக்கி இல்லாதபோது அரசின் அனுமதி பெற்று இவர்களை வேலையிலிருந்து அனுப்புவது இயலாத காரியமாக இருக்கிறது’ என்பதே சீர்திருத்தவாதிகளின் ஆதங்கம்.
தொழிலாளர் சந்தையில் நெகிழ்வுத்தன்மை – அதாவது, எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வேலையில் அமர்த்தலாம், எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்கலாம் எனும் ஏற்பாடு – இருந்தால்தான் முதலாளிகளால் திறம்பட உற்பத்தியை மேற்கொள்ள முடியும்; வேலைவாய்ப்புகளையும் பெருக்க முடியும் எனும் வாதத்தை அரசின் அறிக்கைகளே பறைசாற்றும்போது, தொழிலாளர் நலனைப் பாதுகாக்க யாரிடம் முறையிடுவது?
**மறைமுக உத்திகள் வழியே சீர்திருத்தம்**
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அடுத்தடுத்து வந்த ஒன்றிய அரசுகள், தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவராமலேயே, அவற்றை நீர்த்துப்போகச் செய்து, தொழிலாளர் சந்தையில் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து இருக்கிறார்கள் என்பதே. இது எப்படி சாத்தியமானது? தனியார்மயமும், நெறிமுறை நீக்கலும் தொழிலாளர் சங்கங்களை வலுவிழக்கச் செய்துள்ளபோதும், இன்றும் இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தில் அவற்றின் தாக்கத்தை நாம் அவ்வப்போது காண முடியும். இந்தச் சங்கங்கள் மீதமிருக்கும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவருவதைத் தடுத்துள்ளன.
ஆனால், மூலதனத்தின் தேவைகளுக்கு இணங்கி, ஒன்றிய அரசுகள் குறிப்பாக மூன்று உத்திகளைக் கையாண்டு இந்தச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்துள்ளன. முதலாவதாக, நடைமுறையில் இருக்கும் சட்டங்களை அமல்படுத்துவதில் எந்தவொரு முனைப்பும் காட்டுவதே இல்லை. முதலாளிகளைத் தேவையில்லாமல் தொல்லை செய்ததால்தான் தொழிற்துறை உற்பத்தி பாதிக்கப்பட்டது என்று சொல்லி, சோதனை செய்யும் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது; இன்று ஆலைகளில் சோதனைகள் நடத்தப்படுவதைக் காண்பதே அரிதாக இருக்கிறது. தொழிலாளர் நல அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்து, சட்டங்கள் அமல்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.
இரண்டாவதாக, Factories Act 1948, Industrial Disputes Act 1947, Minimum Wages Act 1948, Contract Labour Act 1970 என்று ஒன்றிய அரசால் இயற்றப்பட்ட சட்டங்களை அமல்படுத்துவதில், பெருமுதலாளிகள் மற்றும் பெருநிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு மாநில அரசுகள் விலக்குகளை வழங்கலாம் என்று அனுமதி கொடுத்து தொழிலாளர் நலச் சட்டங்களை அரசு நலிவடையச் செய்திருக்கிறது. குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இதுபோன்ற விலக்குகளை வழங்கி, முதலாளிகளைக் கவர்வதில் முன்னோடியாகத் திகழ்கின்றன. அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே ராஜஸ்தான் மாநில அரசு கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்களைப் பாராட்டும்போது, இனிவரும் காலத்தில் நாட்டில் தொழிலாளர் நலன் என்னவாகுமோ என்ற கவலை அதிகரிக்கவே செய்கிறது.
மூன்றாவதாக, அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களையும், அணி திரட்டப்படாத தொழிலாளர்களையும் எதிரெதிர் அணிகளாக நிறுத்தி, இந்த இரு அணிகளும் ஒற்றுமையாகத் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதைத் தடுக்கும் அரசியல் வியூகங்களை வகுத்து, மூலதனத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கமே எடுத்துள்ளது.
**புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி**
இந்தச் சீர்திருத்தங்களின் விளைவாக, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்ப்போம். 1990களின் இறுதியில் இருந்துதான் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO), முறைசாராத் துறையின் பல்வேறு அம்சங்களைக் குறித்த விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியது. ஆனால், 1980களில் இருந்தே முறைசார்ந்த நிறுவனங்களில் முறைசாராத் தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்படும் போக்கு தொடங்கியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1985 – 2002 காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஆலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் (contract workers) பங்கு 12 விழுக்காட்டிலிருந்து 23 விழுக்காடாக அதிகரித்ததாக ஓர் ஆய்வு சொல்கிறது. 2011இல் இவர்களின் பங்கு 51 விழுக்காடாக உயர்ந்தது என்று அரசின் புள்ளிவிவரங்களே நமக்குத் தெரிவிக்கின்றன.
மேலும், 1999க்கு பிறகு, பதிவு செய்யப்பட்ட ஆலைகளில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளில் கிட்டத்தட்ட அனைத்தும் முறைசாரா வேலைகளே என்று தெரிகிறது. 1999 – 2011 காலத்தில், பதிவு செய்யப்பட்ட ஆலைகளில் முறைசாரா வேலைகளின் பங்கு, முறைசார்ந்த வேலைகளைவிட மூன்று மடங்கு பெருகியது. பொதுத் துறை நிறுவனங்களிலும் முறைசாராத் தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். 2012ஆம் ஆண்டின் நிலவரப்படி, அரசு ஆலைகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் கிட்டத்தட்ட20 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்று ஓர் ஆய்வு கணித்துள்ளது. 1999 – 2011 காலத்தில், முறைசாராத் தொழிலாளர்களின் பங்கு பொதுத் துறையில் 13 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும், தனியார் துறையில் 39 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாகவும் அதிகரித்தது.
2000 – 2014 காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு சார்ந்த ஆலை வேலைகளின் (organised maufacturing employment) வளர்ச்சியில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பங்கு 50 சதவிகிதம். 2017இல் அமைப்பு சார்ந்த ஆலைகளில், ஒப்பந்தம் மற்றும் முறைசாராத் தொழிலாளர்களின் பங்கு 30 சதவிகிதம். இவர்களுக்குக் குறைந்தபட்ச அடிப்படை ஊதியமோ, சமூகப் பாதுகாப்புப் பயன்களோ கிடையாது.
2004 – 2011 காலத்தில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களிலிருந்து 3.7 கோடி பேர் வெளியே வந்ததாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘உழைக்கும் இந்தியாவின் நிலை 2018’ கூறுகிறது.சரி, இந்த 3.7 கோடி பேருக்கு தொழிற்துறையும், சேவைத் துறையும்தான் வேலை அளித்தனவா? விவசாயம் அல்லாத துறையில் வேலைவாய்ப்புகள் என்று பார்த்தால், கட்டுமானப் பணிகளில்தான் (construction work) அதிகமான எண்ணிக்கையில் வேலையாட்கள் அமர்த்தப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் கட்டுமான வேலைகள் நிரந்தர வேலைகள் அல்ல என்பதையும், தொழிலாளர் பாதுகாப்பை எவ்வகையிலும் உறுதி செய்யாத ஒரு துறை கட்டுமானம் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
�,”