இந்தியா, சீனா மற்றும் துருக்கி மக்களின் குடியேற்றத்தை ஒழிக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நியூசிலாந்து தீவிரவாதி பிரெண்டன் டரேண்ட் கூறியுள்ளார்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் ஹேக்லே பார்க் பகுதியில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் தெற்கு தீவு நகர் அருகேயுள்ள லின்வுட் புறநகர்ப் பகுதி மசூதியில் நேற்று (மார்ச் 15) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 49 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா, சீனா மற்றும் துருக்கியிலிருந்து நியூசிலாந்து நாட்டுக்கு குடியேறியவர்களைக் குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தீவிரவாதி பிரெண்டன் டரேண்ட் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் 74 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இணையத்தில் வெளியிட்டுள்ளார். *மிகப்பெரிய மறுகுடியமர்த்துதல்* என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், “இந்தியா, சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகளிலிருந்து இங்கே படையெடுத்து வருகிறார்கள். அவர்கள் நம்முடைய மக்கள் இல்லையென்றால், அவர்களை நம்மண்ணிலிருந்து அகற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
வெள்ளை இனத்தைச் சார்ந்தவர் என்ற தீவிர இனவெறி தன்மையை வெளிப்படுத்தும் வலதுசாரிகளாக இத்தீவிரவாதிகளை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் அடையாளம் காட்டியுள்ளன. ஐரோப்பியர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு நியூசிலாந்தில் இடம் அளிக்கக்கூடாது என்ற இனவெறியை வெளிப்படுத்தும் விதமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு கடந்த 2 வருடங்களாக திட்டமிட்டதாகவும், கிரிஸ்ட்சர்ச் மசூதியில் தாக்குதல் நடத்தவேண்டும் என்பதை 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டுவிட்டதாகவும் அந்த அறிக்கையில் பிரெண்டன் டரேண்ட் கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு நார்வேயில் 77 பேரைக் கொலை செய்த அன்டெர்ஸ் பெஹ்ரிங் ப்ரிய்விக்கின் என்ற தீவிரவாதியின் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு பிரெண்டன் டரேண்ட் தீவிர வலதுசாரியாக உருவானதாகக் கூறப்படுகிறது. இந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (மார்ச் 16) தனது ட்விட்டர் பதிவில், “நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது.
இப்பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்கோர சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் போன்ற பல்வேறு நாட்டுப் பிரதமர்களும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
�,”