குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முதல் அரசியல் பிரச்சாரத்தை பிரியங்கா காந்தி தொடங்கினார்.
தண்டியாத்திரையின் 89ஆவது நினைவுநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தை நடத்தியது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளும் காரியக் கமிட்டி கூட்டம் குஜராத்தில் இன்று காலையில் நடந்தது. இதனையடுத்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி முதன்முறையாக அரசியல் பிரச்சாரத்தை தொடங்குவதால், அவரது பேச்சை பலரும் எதிர்பார்த்திருந்தனர். பாஜக தலைமையிலான மத்திய அரசை தாக்கியே பிரியங்கா காந்தியின் முழுப் பேச்சும் இருந்தது. ”தேர்தலை விட்டால் வேறு வழியில்லை. சுதந்திரத்துக்கான போராட்டத்தை விட குறைந்த போராட்டமே இங்கு உள்ளது. இதில் உங்கள் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யலாம்” என்று பேசினார்.
மேலும், “தேவையில்லாத பிரச்சினைகளில் கவனத்தை திசை திருப்ப வேண்டாம் என்று மக்களே கூறுகிறார்கள். நான் என்னுடைய இதயத்திலிருந்து பேச விரும்புகிறேன். ஒரு விழிப்புள்ள குடிமகனாக இருப்பதைவிட பெரிய தேசபக்தி எதுவும் இல்லை. உங்கள் விழிப்புணர்வு ஒரு ஆயுதம். உங்கள் வாக்கு ஒரு ஆயுதம். ஆனால் இந்த ஆயுதம் யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை” என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.
பாஜக பிரிவினைவாத அரசியலை மேற்கொள்வதாகக் குற்றம்சாட்டிய அவர், “நாட்டில் என்ன நடக்கிறது இன்று? எனக்கு வருத்தமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெறுப்புகள் பரப்பப்படுகிறது. முக்கிய நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன. இந்த நாட்டை பாதுகாப்பதைத் தவிர உங்களுக்கும், எனக்கும் வேறு முக்கியமான விஷயம் எதுவும் இல்லை. அதற்காகப் பணியாற்ற வேண்டும். அதைநோக்கி ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும். முடிவெடுப்பதற்கு முன்பு கடினமாக யோசித்துப் பாருங்கள். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் தருவதாய் சொன்னார்கள், எங்கே போனது? கறுப்புப் பணத்தை மீட்டு வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாய் சொன்னார்கள், எங்கே போனது? பெண்களின் பாதுகாப்பு என்ன ஆனது?” என்றார்.
�,