இட ஒதுக்கீடு: புறக்கணிக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர்!
கடந்த 3 முதல் 5 வருடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களில் 40 விழுக்காட்டினருக்கு இட ஒதுக்கீட்டின் பயன் சென்றடையவே இல்லை என்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருந்தாலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்திலிருந்து மிகக் கடுமையான எதிர்ப்புகள் இதற்குக் கிளம்பியுள்ளன. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 10) வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடே நியாயமாக வழங்கப்படாமல் பிற்படுத்தப்பட்டவர்கள் பெரும் புறக்கணிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், முன்னேறிய சமூகத்தினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. மத்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலை என்ன என்பது குறித்த அறிக்கையை 2018ஆம் ஆண்டு அக்டோபரில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான துணை வகைப்படுத்துதல் ஆணையம் தனது முதல் ஆலோசனை அறிக்கையை அளித்திருந்தது.
மத்திய உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஏ.ஐ.ஐ.எம்.எஸ். (எய்ம்ஸ்), மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் சட்டப் பல்கலைக் கழகங்களில் கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் நிலை குறித்து இந்த ஆய்வில் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அஞ்சல் துறை, ரயில்வே துறை, காவல் துறை, பொதுத் துறை வங்கிகள், காப்பீடு & நிதி நிறுவனங்கள் மற்றும் சில முக்கியப் பொதுத் துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான நிலை என்னவென்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிமைச் சேவைகள் மற்றும் மத்திய செயலாளர்களும் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் மையக் கருவை மட்டும் இங்கு தருகிறோம்.
மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் நாடு முழுவதும் 2,633 ஜாதிகள் உள்ளன. இதில் 983 ஜாதிகளுக்கு மேற்கூறிய துறைகளில் ஒரு இடம் கூட கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில் வழங்கப்படவில்லை. 994 ஜாதிகளுக்கு வெறும் 2.68 விழுக்காடு இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட 10 ஜாதியினருக்கு 24 விழுக்காடு இடங்களும், 38 ஜாதியினருக்கு 25 விழுக்காடு இடங்களும் வழங்கப்பட்டுள்ளன என்பது இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், நீதிபதியுமான வி.ஈஸ்வரய்யா இதுகுறித்து *டி.என்.என்.* ஊடகத்திடம் பேசுகையில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 27விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களில் 15 விழுக்காட்டினருக்கு மட்டும்தான் இதன் பயன் சென்றடைந்துள்ளது” என்றார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் பெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் பொருளாதார அடிப்படையிலான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அந்தத் தீர்மானத்தை எதிர்த்து கனிமொழி பேசுகையில், “மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. குரூப் ஏ பணிகளில் 17 விழுக்காடும், குரூப் பி பணிகளில் 14 விழுக்காடும், குரூப் சி பணிகளில் 11 விழுக்காடும், குரூப் டி பணிகளில் 10 விழுக்காடும் மட்டும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் இந்த இட ஒதுக்கீட்டையே உங்களால் ஒழுங்காக நடைமுறைப்படுத்த இயலவில்லை. பிறகு எதற்கு வேறு கனவுகளுக்கு வண்ணம் பூசுகிறீர்கள்” என்று கேள்வியெழுப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.
**- பிரகாசு**
**[பழங்குடியினர் இட ஒதுக்கீட்டின் நிலை!](https://minnambalam.com/k/2019/01/09/73)**�,