சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தொழிலதிபருமான ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று (செப்டம்பர் 28) மாலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் தங்கபாலு, கன்னியாகுமரி எம்.பி.வசந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சந்திப்பின்போது, தேர்தலில் எவ்வகையான அணுகுமுறையைக் கையாளலாம் என்பதைப் பற்றியும் கலந்தாலோசித்தனர்.
பின்னர் அனைவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், “கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் நாங்குநேரி தொகுதியில் எந்த அளவுக்குச் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கிறோமோ, அதேபோல், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பல மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி வருகிற 9, 10 ஆகிய தேதிகளிலும் – அதேபோல் தொடர்ந்து 15, 16 ஆகிய தேதிகளிலும் நாங்குநேரி தொகுதியில் நான் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளேன்” என்று தெரிவித்தார்.
“இரண்டு தொகுதிகளில் எந்தெந்தப் பிரச்சினைகளை மக்களிடத்தில் முன்னெடுத்துச் சொல்லப் போகிறீர்கள்? மக்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகள் என்ன?” என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கினோமோ அந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்யவுள்ளோம். குறிப்பாக இன்றைக்குத் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுகவின் கரெப்ஷன், கமிஷன், கலெக்ஷன் ஆட்சி மற்றும் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சர்வாதிகாரம் – சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு இவற்றையெல்லாம் முன்னிலைப்படுத்தி எங்களுடைய பிரச்சாரம் அமையவிருக்கிறது” என்று பதிலளித்தார்.�,