விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அங்கு தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (அக்டோபர் 2) கஞ்சனூரில் நடைபெற்றது. அதில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, “நவம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும். நாங்கள் வந்தாலும், முதல்வர் வந்தாலும், கடவுளே வந்தாலும் தேர்தலை தள்ளிவைக்க முடியாது. நடத்தியே ஆக வேண்டும். இங்கு வருகை தந்திருக்கும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு இதைத்தான் சொல்கிறேன். கூட்டணி வைத்தவுடன் தலைவர்கள் நாம் எம்.பி, எம்.எல்.ஏ.விற்கு நின்று ஜெயித்துவிடுகிறோம். நம்மை பதவியில் அமரவைத்து அழகுபார்த்த தொண்டனுக்கு நாம் என்ன கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கான உரிய வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா?
அதனால்தான் ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டு கூட்டணி முறிந்துவிடுகிறது. யாரையும் குறைசொல்லவில்லை. பாமகவும் அப்படித்தான் செய்கிறது. நீங்கள் ஜெயித்து எம்.எல்.ஏ, மந்திரி ஆகிவிடுவீர்கள். ஆனால், உங்கள் தொண்டன் கவுன்சிலர் ஆக முடியவில்லை. நீங்களும் உள்ளாட்சிப் பதவிகளை கைப்பற்ற வேண்டும். அதற்கு விக்கிரவாண்டி தேர்தலில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலும் நம் கூட்டணி தொடர்ந்து அனைத்து இடங்களிலும் அமோக வெற்றிபெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையே வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியவில்லை என்றால் யாரை வைத்து வெற்றிபெற முடியும். உங்களுடைய சக்தியை நீங்கள் உணருங்கள். நாம்தான் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்ட சி.வி.சண்முகம்,
ஜெயலலிதாவின் ஆட்சி இன்று நடப்பதற்கு காரணம் 2011ஆம் ஆண்டு தேமுதிக போட்ட அடித்தளம்தான். அந்த நன்றி விசுவாசத்தை நாங்கள் மறக்கவில்லை. அன்றைக்கு கூட்டணி முறியும் சூழ்நிலை உருவானபோது, கூட்டணி தொடர வேண்டும் என அதிமுகவினர் அனைவரும் தலைமையிடம் சொன்னோம். உங்கள் தலைவரை எந்த இடத்திலும் நாங்கள் தரக்குறைவாக பேசியது கிடையாது. விஜயகாந்த் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் தமிழக அரசியலின் நிலை வேறாக இருந்திருக்கும். ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போயிருப்பார். தேமுதிகவை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. நீங்கள் உங்களது பலத்தை உணருங்கள். இதுதான் நமக்கு கடைசி வாய்ப்பு” என்று தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார்.
�,