திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தலைமை தபால் நிலையத்தில் வங்கி சேவை தொடக்க விழா நேற்று (செப்டம்பர் 1) நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எல்லாத் துறையிலும் லஞ்சம் வாங்குவதாக கமல்ஹாசன் கூறுகிறாரே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “கமல்ஹாசன் அரசியல் அனுபவம் இல்லாமல் பேசுகிறார். லஞ்சம் எந்தத் துறையில் நடைபெற்றுள்ளது என்று கூற வேண்டும். எந்தக் குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் குடும்ப ஆட்சி செய்கிறார் என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டுகிறாரே என்ற கேள்விக்கு, “எது குடும்ப ஆட்சி என்பது மக்களுக்குத் தெரியும். அதிமுகவில் இருந்து அவரை விலக்கி வைத்த விரக்தியில் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று பதிலளித்தார்.
ஆர்.கே. நகா் தேர்தலில் வெற்றி பெற்றது போல, வரும் இடைத்தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என தினகரன் கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு, “தேர்தல் வந்தால் எல்லோரும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று சொல்வார்கள். திருப்பரங்குன்றத்தில் இதுவரை நடந்த 11 தேர்தல்களில் 9 தேர்தல்களில் அதிமுகதான் வெற்றி பெற்றது. அதேபோல தற்போது அதிமுகதான் வெற்றி பெறும்.
திருவாரூரில் இதுவரை திமுக தலைவர் கலைஞர் நின்றதால் வெற்றி பெற்றனர். ஆனால் தற்போது அங்கும் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்.�,