உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் பலத்த காற்றுடன், கன மழை பெய்ததின் காரணமாக, தாஜ்மஹால் வளாகத் தூணின் கலசம் நேற்றிரவு இடிந்து விழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று(ஏப்ரல் 11) முதல் பலத்த காற்றுடன், கன மழை பெய்துவருகிறது. அப்போது, மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. பலத்த காற்று மற்றும் கன மழை காரணமாக, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் தூண் இடிந்துவிழுந்துள்ளது.
நேற்றிரவு பெய்த கன மழையால், தாஜ்மஹாலின் தெற்கு நுழைவு வாயிலில் உள்ள, சுமார் 12 மீட்டர் உயரமுள்ள உலோகத் தூணின் கலசம் திடீரென இடிந்துவிழுந்தது. தூண் இடிந்து விழுந்ததில், எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளதாகவும், அங்குள்ள விவசாய நிலங்களும் அதிகமாகச் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பலத்த காற்றுடன், கன மழை பெய்துவருவதால், அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹால் கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவரது இளம் மனைவி மும்தாஜின் நினைவாக மஹால் கட்டப்பட்டது. இது காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது. மேலும் இக்கட்டிடம் 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.�,