வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை இதே நிலையிலேயே தொடரவேண்டும் என்று வற்புறுத்தியும் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி நாடு தழுவிய பந்த் நடந்தது. இதில் ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது.
இந்நிலையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர் சாதி அமைப்புகள் நேற்று (ஏப்ரல் 10) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன. இதில் பீகார் மாநிலத்தில் வன்முறை வெடித்தது.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பந்த்துக்கு அழைப்பு விடுத்ததை ஒட்டி, இந்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனபோதும் பீகாரில் வன்முறை வெடித்தது.
கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி உயர் சாதி அமைப்புகள் இந்த பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
பீகாரில் போஜ்பூர் மாவட்டத்தில் உயர் சாதி இளைஞர்கள் சாலை மறியல், ரயில் மறியலிலில் இறங்கினார்கள். பாட்னா உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆரா நகரில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 12 பேர் காயமடைந்திருக்கிறார்கள். உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிற்சில சம்பவங்கள் நடைபெற்றன. பஞ்சாப்பிலும் ஓரிரு இடங்களில் மோதல் நடந்தது.
இந்நிலையில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பந்த் போராட்டத்துக்குப் பின்னால் இருப்பது பாஜகதான் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
“ இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டம் கொடுத்திருக்கிற உரிமை. இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசியல் சட்டத்துக்கு விரோதமாக நடத்தப்பட்ட பந்த்- தை பின்னால் இருந்து இயக்கியிருப்பது பாஜகதான். தலித்துகள், பழங்குடியினர், மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைத்து வரும் இட ஒதுக்கீட்டை பலவீனமாக்கும் நோக்கத்தோடு, உயர் சாதியினரைத் தூண்டிவிட்டு தான் முன்னால் வராமல் பின்னே இருந்து இதை பாஜகதான் நடத்தியிருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கும் மாயாவதி அதே அறிக்கையில் இன்னொரு கருத்தையும் கூறியிருக்கிறார்.
“உயர் சாதியினரில் இருக்கும் ஏழைகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு அளிப்பதை பகுஜன் சமாஜ் ஆதரிக்கிறது. இதற்கான அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வலிறுத்தியும் எனது கோரிக்கைகள் இதுவரை ஏற்கப்படவில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார் மாயாவதி.�,