இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.அப்படி தன் இசையாலும் வசீகர குரலாலும் அனைவரையும் கட்டி போட்டவர் பாடகி ஷ்ரேயா கோஷல்.இவரின் மேடை நிகழ்ச்சிகள் அடிக்கடி அரங்கேறி வந்தாலும், இந்த முறை சென்னையில் (கடந்த 23) ஆம் தேதி நடைபெற்றது
எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டம் அலைமோதிய அந்த அரங்கில் குறித்த நேரத்தினை விட அரை மணி நேரம் தாமதமாக தான் நிகழ்ச்சித் தொடங்கியது. முதலில் இரு பாடல்களைப் ஷ்ரேயா கோஷலின் இசை குழுவில் இடம் பெற்றவர்கள் மாறி மாறி பாடினர். சிறிது நேரத்திற்கு பிறகு மக்கள் பொறுமை இழக்க ஆரம்பிக்கும் முன் ஷ்ரேயா பாடிக் கொண்டே தேவதை மாதிரி அரங்கத்தில் என்ட்ரி கொடுத்தார்.
துளிக் கூட மூச்சு வாங்காமல் நளினமாக மேடையில் சில அசைவுகளுடன் நடனமாடிக் கொண்டே தான் பாடினார். வரிசையாகப் பல ஹிந்திப் பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாக, கொஞ்சம் கூட இடைவெளி விடவில்லை. பலப் பாடல்கள் சோலோ நம்பர்கள் தான். அவர் முதல் முதலில் தேவதாஸ் படத்திற்குப் பாடிய பாடலையும் பாடினார். அனாயாசமாக உயர்ந்த பிட்சைப் பிசிறில்லாமல் எட்டிப் பிடித்தார். ஒவ்வொரு பாட்டு முடிந்த பிறகும் ஆடியன்சுடன் பேசி பதில்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
ஆனால் ஹிந்தி ஒரு வார்த்தை கூட எனக்கு புரியவில்லை. சென்னை எக்ஸ்பிரஸில் இருந்து ஒரு பாடலும், டெல்லி 6 லிருந்து ஒரு பாடல் என வரிசையாக பாடி கொண்டிருந்தார். இசைக்கு மொழி அவசியம் இல்லை தான். ஆனாலும் ஒரு மணி நேரம் ஹிந்திப் பாடல்களையேக் கேட்டுக் கொண்டு தமிழ் பாடலைக் கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. நான் மட்டுமல்ல அங்கு இருந்த பலரும் அந்த எண்ணத்தில் தான் இருந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரு சில நிமிடத்திற்குள் சிலர் தமிழ் பாடல் ப்ளிஸ் என்று கத்த தொடங்கினார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து என்னையும் மறந்து கத்த தொடங்கினேன். எங்கள் குரல் அவரை சென்று அடைந்ததோ என்னவோ பாடுவதற்கு முன்பு நான் பாடிய எல்லா மொழி பாடல்களிலும் இந்தப் பாடலே எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் என்று சொல்லி முதல் தமிழ் பாட்டாக முன்பே வா என் அன்பே பாட்டைப் பாடினார்.
வந்திருந்த ஆடியன்ஸில் குறைவானவர்கள் தமிழர்கள் என்று நினைக்கிறேன். முழுக்க முழுக்க ஹிந்தி கும்பல். அவர் நடுவில் ரசிகர்களுடன் உரையாடியதும் ஹிந்தியிலேயே தான் இருந்தது. சில ஆங்கில வார்த்தைகள் நடு நடுவில் பயன்படுத்தியதால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
அடுத்தப் பாடலாக மன்னிப்பாயா என தொடங்கும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இடம்பெறும் பாடலை பாடினார். கேட்க எளிமையானப் பாடலாகத் தோன்றினாலும் பாடுவதற்கு மிகவும் கடினமானப் பாடல், அதுவும் மேடையில் பாடுவதற்கு என்று குறிப்பிட்டுச் சொன்னார். ஏ.ஆர். ரஹ்மானை மிகவும் புகழ்ந்து பேசிய அவர் ரஹ்மான் எனக்கு நிறைய அருமையானப் பாடல்களை அளித்தது எனது பாக்கியம் என்றும் கூறினார்.
மன்னிப்பாயா, பாடலுக்கு ஷ்ரேயா தனியாகவே பாடினர். அதி அற்புதமாக அந்தப் பாடலை பாடினார். ஆண் குரலை பாடும் பொது சூப்பர் ஹை பிட்ச் எடுத்துப் பாடினர். மிருதா மிருதா பாடல் என தமிழ் பாடல்களுக்கு மட்டும் தான் ஐபாட் பார்த்துப் பாடினர். ஆனால் அனைத்து ஹிந்திப் பாடல்களும் மனப்பாடம்.
நிறைய பேர் நிகழ்ச்சி முடிய சிறிது நேரம் இருக்கும் போதே கிளம்பிவிட்டனர் .அதற்கு முக்கியக் காரணம். அவர் தொடர்ந்து பாடிய ஹிந்தி பாடலால் தான். சென்னையில் நடப்பதால் பல தமிழ் பாடல்கள் நிகழ்ச்சியில் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எனக்கிருந்தது. வந்திருந்த கூட்டத்துக்கு அந்தத் தேவை இருக்கவில்லை. மேலும் ஷ்ரேயாவுக்கும் தமிழ் பாடல்கள் தேவை என்ற எண்ணம் இல்லை என்றே தோன்றியது.
�,”