இங்க தண்ணி பிடிக்க வராதே – தாழையூத்தில் தீண்டாமை!

Published On:

| By Balaji

மரிய பனி மோனிஷா. ப

தேர்தல் முடிவுகள் வந்த சில நாட்களிலேயே, வடமாநிலங்களில் இஸ்லாமியர்களையும் தலித்துகளையும் தாக்குதலுக்கு உள்ளாக்கும் வீடியோக்களும் செய்திகளும் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முகநூலில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் எங்களை கருணைக் கொலை செய்துவிடுங்கள்” என தன் குடும்பத்தோடு நின்று கேட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுவந்தது.

அந்த வீடியோவில் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த முத்துமாரி, அவர் கணவர் சமுத்திர பாண்டியன், அவர்களின் மகள் முத்துச்செல்வி ஆகியோர் இருந்தனர். இவர்கள் சொந்த ஊரில் பிழைப்பு ஏதும் இல்லாத காரணத்தால் இரண்டு வருடங்களுக்கு முன்பு தாழையூத்து பகுதியில் வாடகைக்குக் குடியேறியுள்ளனர். முத்துமாரி துப்புரவுத் தொழிலாளியாகவும் சமுத்திர பாண்டியன் பெயின்டராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

அன்றாடம் வேலைக்குச் சென்று கிடைத்த பணத்தைக்கொண்டு சிக்கனமான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த இவர்கள், கருணைக் கொலை வரை செல்ல காரணமாக இருந்தது என்ன என்ற கேள்விக்கு, “அக்கம்பக்கத்து வீட்டாரின் தீண்டாமைதான் காரணம்” என்கிறார் முத்துமாரி.

“சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல்தான் இங்க வந்து குடியேறினோம். இஸ்லாம் மதக்காரங்க வீட்டில் வாடகைக்கு இருக்கோம். இதுவரை அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் பண்ணினதில்ல. நாங்க வாடகைக்கு வரும்போதே இன்ன சாதினு சொல்லிதான் குடிவந்தோம். அவர்களால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இங்க சுத்தி இருக்கிறவங்கதான் பிரச்சினை பண்றாங்க. எங்களைக் கண்டாலே அவங்களுக்குப் பிடிக்கிறதில்லை. என் தொழிலும் சாதியும்தான் அவங்களுக்கு உறுத்தலா இருக்குது. அதுல எங்க தப்பு என்ன இருக்கு?” என ஆதங்கப்படுகிறார் முத்துமாரி.

அன்றாடத் தேவைகளில் ஒன்றான தண்ணீரில்தான் பிரச்சினையே தொடங்குகிறது. அரசாங்கம் அமைத்துவைத்துள்ள பொதுநல்லியில் (குடிநீர் குழாய்) தண்ணீர் பிடிக்கச் செல்லும்போதுதான் சண்டையும் வாக்குவாதமும் ஏற்படுகின்றன என்கிறார்.

“நீ துப்புரவு வேலை பாக்குற. அதனால உன்மேல அழுக்கும் கிருமியும்தான் இருக்கும். தண்ணி பிடிக்க வராதேன்னு சொல்றாங்க. அவங்க பிடிச்ச அப்புறம்தான் நான் தண்ணி பிடிக்க வரணும்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்? ஒருவேளை தண்ணி நின்னு போச்சுனா அப்புறம் குடிக்க தண்ணிக்கு நாங்க என்ன பண்றது. பொதுநல்லினா எல்லாருக்கும் பொதுதானே. இன்ன சாதி தொடணும், தொடக் கூடாதுனு இருக்கா?” என்றவரை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டுப் பேசத் தொடங்குகிறார் அவரது கணவர்.

**காவல் துறையின் பாரபட்சம்**

“ஏதாவது ஒருநாள் சண்டைனா பரவாயில்ல. இப்ப மாசக் கணக்கா இதையேதான் பண்ணிட்டு இருக்காங்க. இதனால மார்ச் மாசம் 24ஆம் தேதி தாழையூத்து போலீஸ்கிட்ட புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொன்னோம். ஆனால், ஏழைகளுக்கு நீதி எப்படி கிடைக்கும்? பண பலமும், ஆள் பலமும் வெச்சு கேஸ் இல்லாமலே பண்றாங்க. எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதைப் பத்தி கேட்டதுக்கு என் மனைவிக்கு போலீஸ் ஸ்டேஷன்லயே தாக்குதல் நடந்துச்சு. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சொல்லி எஸ்.பி. ஆபீஸ் போனோம். அங்கிருந்து திரும்பவும் தாழையூத்து போலீஸ் ஸ்டேஷனுக்குதான் அனுப்பி வெச்சாங்க. எந்த முன்னேற்றமும் இல்ல. ஆனால், தனிப்பட்ட முறையில் எங்க மேல தாக்குதல் அதன் பிறகு அதிகமாச்சு” என்கிறார் சமுத்திர பாண்டியன்.

இந்தப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தாக்குதலால் உடைந்த கையினால் சின்ன பொருளைக்கூட தூக்க முடியவில்லை. இதனால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை என மனமுடைந்து பேசுகிறார். “எல்லாரையும் போல வாழத்தான் நாங்களும் போராட்டிட்டு இருக்கோம். போலீஸ் ஸ்டேஷனில் தாக்கப்பட்ட அடுத்த நாளே காயங்களோட கலெக்டரிடம் போய் மனு கொடுத்தோம். நடவடிக்கை எடுப்பதா சொன்னாங்க. இன்னும் நிலைமை அப்படியேதான் இருக்கு” என்கிறார் சமுத்திர பாண்டியன்.

முன்பு வெறும் குழாயடியில் நடக்கும் சண்டையாக இருந்தது. இப்போது வேறு மாதிரியான வடிவங்கள் எல்லாம் எடுத்துள்ளது என்பதையும் அவர் விளக்குகிறார்: “குடிச்சிட்டு வம்பு பண்ற ஆளுங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து எங்களுக்கு தொந்தரவு தர சொல்றாங்க. வீட்டை நோட்டம் போடறது, கல் எறியறது, மோசமான வார்த்தைல பேசறதுன்னு நரக வேதனை” என கூறிக்கொண்டே அழத் தொடங்கிவிட்டார் முத்துமாரி.

ஒருவாறாகத் தன்னைத் தேற்றிக்கொண்ட அவர், “என்ன ஆனாலும் பாத்துடலாம்னு முடிவுக்கு வந்துட்டோம். தற்கொலை செஞ்சிக்கற எண்ணமெல்லாம் போய் வாழலாம், என்ன செஞ்சிடுவாங்கன்னு ஊடகத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் தகவல் கொடுத்து உண்மையை வெளியே சொன்னேன். சாதியெல்லாம் இல்லைன்னு சொல்றவங்க இதைப் பாத்து தெரிஞ்சிக்கட்டும். எந்த அளவுக்கு வேதனையும் அவமானமும் பட்டிருந்தா குடியரசுத் தலைவர் கிட்ட கருணைக் கொலை செய்ய சொல்லி மனு கொடுத்துருப்போம்னு மக்கள் தெரிஞ்சிக்கணும்” என்றார்.

சாதிச் சான்றிதழைக் கிழித்தால் சாதி ஒழிந்துவிடும், சாதியைச் சொல்லாமல் இருந்துவிட்டால் சாதி ஒழியும் என்று சாதியை ஒழிக்க கலர் கலராகத் தீர்வு வைத்திருப்போர் தீண்டாமையை தினசரி வாழ்வில் சந்திக்கும் முத்துமாரியை ஒருமுறை கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும். குலசாமி, ஊர், பெயர் என்றெல்லாம் கேட்டு ஏதோ ஒரு வகையில் சாதியை ஊடுருவிப் பார்க்கவே சமூகம் விழைகிறது. தான் பிறக்க நேரிட்ட சாதியை கவுரவமாக, அடையாளமாக, பெருமிதமாக நினைப்பதைத் தனிமனிதர்கள் தவிர்க்கும்போதுதான் முத்துமாரி போன்றவர்களின் வேதனைக்கு அவசியமிருக்காது. சமூகம் என்பது ஒவ்வொரு தனிமனிதரும் இணைந்ததுதானே.

அவர்களின் மாற்றத்துக்காகவும்தான் முத்துமாரியும் சமுத்திர பாண்டியனும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)

**

**

[டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!](https://minnambalam.com/k/2019/06/08/73)

**

**

[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share