இங்கிலாந்து தொடருக்குத் தயாராகும் தமிழக வீரர்கள்!

Published On:

| By Balaji

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி விஜய் இருவரும் பங்கேற்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் மூன்றாவது சீசன் திருநெல்வேலியில் இன்று (ஜூலை 11) தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் வீரர்களின் தரத்தை உயர்த்தும் நோக்கில் டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி 2016ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இன்று தொடங்கவுள்ள இதன் மூன்றாவது சீசனின் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஆகஸ்டு 12ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடர் நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் மாறி இருக்கிறார்கள். இதே போல் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காஞ்சி வீரன்ஸ் என்று பெயரை மாற்றி இருக்கிறது.

இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கிறது. நெல்லை மற்றும் திண்டுக்கல்லில் தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 ஆட்டங்களும் நடைபெறுகிறது. முதல் தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் சுற்று மற்றும் 2ஆவது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல்லிலும், இறுதிப்போட்டி சென்னையிலும் நடத்தப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share