இங்கிலாந்து தூதரகம் நோக்கி பேரணி: புதிய தமிழகம்!

Published On:

| By Balaji

“தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் சேர்த்த ஆங்கிலேய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியினர் சென்னையிலுள்ள இங்கிலாந்து துணை தூதரகம் நோக்கி பேரணி நடத்தினர்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியும், அதன் தலைவர் கிருஷ்ணசாமியும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இதற்காக மாநாடும் நடத்தியிருந்தனர். இந்த நிலையில் தங்களை எஸ்.சி பட்டியலில் சேர்த்த ஆங்கிலேய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்திலுள்ள இங்கிலாந்து துணைத் தூதரகத்தை, கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் இன்று (நவம்பர் 15) பேரணியாகச் சென்று முற்றுகையிட்டனர். பேரணியின்போது, மன்னிப்புக் கேள், மன்னிப்புக் கேள், பிரிட்டிஷ் அரசே மன்னிப்புக் கேள் என்றும், பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய கிருஷ்ணசாமி, “சலுகைகளை விட எங்களுக்கு கவுரவமே முக்கியம். தேவேந்திரகுல வேளாளர் என்ற அடையாளத்துக்காக எந்த வித சலுகைகளையும் இழக்கத் தயாராக உள்ளோம். ஆங்கிலேய காலத்திலேயே பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று போராடியுள்ளனர். தேவேந்திர குல வேளாளர்கள் எந்த வித தீண்டாமைக்கும் ஆளாக்கப்பட்டவர்கள் அல்ல, முழுக்க முழுக்க வேளாண் தொழிலை செய்தவர்கள். இவர்களை தீண்டத்தகாதவர்கள் பட்டியலில் சேர்க்கிறீர்களே என்று அவர்கள் கோரியுள்ளனர். ஆனால் ஆங்கிலேயர்கள் செவிமடுக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் இவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக வேண்டியிருந்திருக்காது” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1928ஆம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர்களை தவறுதலாக எஸ்.சி எனப்படக்கூடிய பட்டியல் பிரிவில் அப்போதைய ஆங்கில அரசு சேர்த்துள்ளது. இது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அந்த வரலாற்றுத் தவறுக்காக இன்றைய ஆங்கிலேய அரசு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து துணை தூதரகத்தை நோக்கி பேரணி நடத்துகிறோம்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “மத்திய, மாநில அரசுகள் எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். குறிப்பாக ஏழு பெயர்களில் அழைக்கப்படக் கூடிய ஒரே சமுதாய மக்களை, தேவேந்திர குல வேளாளர்கள் என்று அழைக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், மாநில அரசின் பரிந்துரையைப் பெற்று மத்திய அரசு தற்போது இருக்கக் கூடிய பட்டியல் பிரிவிலிருந்து எங்களை விலக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share