ஆஸ்திரேலியத் தொடருக்குத் தயாராகி வரும் விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 21ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டுத் தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் இல்லாமல், இளம் படையை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற ஆர்வம்தான் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணம்.
ஆஸ்திரேலியா மண்ணில் கோலியின் செயல்பாடு இதுவரை மிகச் சிறப்பாகவே இருந்துள்ளது. அதுமட்டுமின்றி சமீபகாலமாக முழு உடற்தகுதியுடன் கூடிய அசுர பலத்துடன் இருக்கும் அவரை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி தற்போது கடும் திட்டமிடலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வான், விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விளையாட்டு செய்தி ஊடகமான ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், விராட் கோலியின் சமீபத்திய சாதனைகள் குறித்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு, விராட் கோலி ஆஸ்திரேலியாவிலும் அவரது ஆட்சியைத் தொடர்வாரா?” என்று கேள்வி ஒன்றை எழுப்பியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் பதிவை ரீட்வீட் செய்த மைக்கேல் வான், “நிச்சயமாக…” என்று கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி, 10 ஆயிரம் ரன்களைக் கடந்து, அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.�,”