அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.
பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பாஜக நிர்வாகி விஜயரகு கொலை செய்யப்பட்டது மத ரீதியிலானது. இப்படியே இந்துக்களைக் கொல்லும் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்ந்துகொண்டு சென்றால், இந்து பயங்கரவாதம் உண்டாவதை எவனும் தடுக்க முடியாது” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
ஏற்கனவே ஓ.பி.ரவீந்திரநாத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்களில் கைகளை முறிக்கத் தங்களுக்குத் தெரியும் என அமைச்சர் பேசியிருந்த நிலையில், தற்போது மீண்டும் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்கி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று (பிப்ரவரி 2) செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “தமிழகத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின், பார்சி உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் அண்ணன், தம்பி போல பழகி வருகிறோம். திமுகவை சமூக சீர்கேடு என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தைப் பிடித்த கொரோனா வைரஸ் திமுக. இதுபோன்ற வைரஸ்களால் விஷமிகள் எப்படியாவது மத வேறுபாடுகள் அடிப்படையில் தமிழகத்தைப் பிளவுபடுத்தி அதில் குளிர் காயலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், எந்த நிலையிலும் அதுபோன்று நடக்காது” என்று குறிப்பிட்ட ஜெயக்குமார்,
“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்வதில்தான் தெரிந்துகொண்டேன். தற்போது நான் சொல்வதுதான் அதிமுகவின் கருத்து. ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் என்ன சொன்னாலும் அதை அவர்களின் கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.
கடவுள் இல்லை என்று யார் சொன்னாலும் கல்லைக்கொண்டு அடிப்போம் எனவும் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு, “இதுபற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் கோட்பாடுபடி நடந்துவருகிறோம். தனிப்பட்ட முறையில் சொல்லும் கருத்துகள் அனைத்தும் கட்சியின் கருத்து அல்ல” என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது மு.க.ஸ்டாலின் சொல்லுவதை கேட்க… அவரின் கோரிக்கையை ஏற்க” என்று ஸ்டாலினுக்குப் பதில் சொல்லியிருக்கிறார்.�,