ஆலி ஜனாப் தயாநிதிமாறன் சாஹிப்: காதர் மொய்தீன் கருத்தால் சலசலப்பு

Published On:

| By Balaji

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனை, ‘ஆலி ஜனாப் தயாநிதிமாறன் சாஹிப்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் அழைத்தது சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பாக தயாநிதிமாறன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பாக பாமகவை சேர்ந்த சாம்பால் போட்டியிடுகிறார். அமமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த தெகலன் பாகவி போட்டியிடுகிறார்.

சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய வாக்குகள் கொண்ட இத்தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் தெகலான் பாகவிக்கு ஆதரவாக அக்கட்சியினர் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்யும்போது, “இமாம் தெகலான் பாகவி அவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று கூறி வருகிறார்கள். இது திமுகவினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இஸ்லாமியர்கள் இஸ்லாமியரான இமாம் தெகலான் பாகவிக்கே வாக்களிக்க வேண்டும் என்ற ரீதியில் செய்யப்படும் பரப்புரையால் தயாநிதிமாறனுக்கு விழும் இஸ்லாமிய வாக்குகள் குறைந்துபோகுமோ என்ற எண்ணம் திமுக தரப்பில் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த வெள்ளியன்று புரசைவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசும்போது, “முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று கிடையாது. அது ஜனநாயகத்துக்கு விரோதமானது. முஸ்லிமுக்குதான் வாக்குப்போடவேண்டும் என்று எந்த பைத்தியக்காரனாவது நினைத்தால், அவனுக்குச் சொல்கிறேன் ஆலி ஜனாப் தயாநிதிமாறன் சாஹிப்புக்கு வாக்களியுங்கள் உதயசூரியன் சின்னத்திலே” என்று பேசியிருக்கிறார்.

காதர் மொய்தீன் பேசியது மார்க்க விரோதம் என்றும், அரசியலில் மதத்தைக் கலக்கிறார் என்றும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மமக மாநில இளைஞரணிச் செயலாளர் புஷல் ஷேக் முகமது அலி,

“மோடியை வீழ்த்த மதச்சார்பற்ற திமுக கூட்டணியால் மட்டுமே முடியும் என்று மமக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் சிலர் வேறு வேறு வழிகளில் இஸ்லாமிய வாக்குகளை மடைமாற்ற முயற்சி செய்கின்றனர். இந்த நிலையில்தான் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் மிகுந்த அனுபவம் மிக்கவர் என்பதை இந்தப் பேச்சின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். மத்திய சென்னையில் முஸ்லிம்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்தினால் அதே இலக்கணத்தை ராமநாதபுரம் தொகுதிக்கும் பின்பற்றுவார்களா? அங்கே முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறாரே” என்று கேட்டார் ஷேக் முகமது அலி.

இதற்கிடையில் காதர் மொய்தீன் பேச்சு பற்றி கருத்து வெளியிட்டுள்ளனர் மார்க்க அறிஞர்கள், “பொதுவாக சொற்பொழிவுகளில் சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த பிரமுகர்களை ஆலி ஜனாப் என்று குறிப்பிடும் மரபு தமிழகத்தில் இல்லை. அப்படியே குறிப்பிட்டாலும் பொதுவான நேரங்களில் அது மரியாதையான சொல்லாடல்தான் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மதிப்பிற்குரிய பேராசிரியர் காதர் மொஹிதீன் அவர்கள் இந்த இரண்டு கோணத்திலும் சொல்லவில்லை.

முஸ்லிமுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று எந்தப் பைத்தியக்காரனாவது நினைத்தால் அவனுக்கு நான் சொல்கிறேன்-ஆலி ஜனாப் தயாநிதி மாறன் சாகிபுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். முஸ்லிமிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்வது எப்படிப் பைத்தியக்காரத்தனம் ஆகும்? அப்படியானால், முஸ்லிம் லீகிற்கு வாக்களியுங்கள் என்று சொல்பவர்கள் எல்லாம்..? “ஆலி ஜனாப்” என்று ஒருவரை அழைத்துவிட்டால் அவர் முஸ்லிம் ஆகிவிடுவாரா? கலிமா கூட சொல்லத் தேவை இல்லையா? இஸ்லாமிய வாழ்வியலை நன்கு அறிந்த பேராசிரியர்கூட இப்படிப் பேசுகிறாரே?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பத்திரிகையாளர் சிராஜுல்ஹஸன்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share