தமிழகத்தில் ஆம்னி பேருந்து நிலையங்களில் இருக்கும் அங்கீகாரமற்ற முகவர்கள் மற்றும் தரகர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருக்கும் முகவர்கள், தரகர்கள், பயணிகளை தாங்கள் விரும்பும் பேருந்துகளில் பயணிக்கவிடாமல், அவர்கள் காட்டும் பேருந்துகளில் ஏற வற்புறுத்துகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து புறப்படும் எனக் கூறி கட்டாயப்படுத்தி பயணிகளைப் பேருந்துகளில் ஏற்றுகின்றனர். ஆனால், 2 மணி நேர தாமதத்துக்குப் பின்னரே பேருந்துகள் புறப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் கட்டணமும் அதிகமாக வசூலிக்கின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால், அங்கீகாரமற்ற தரகர்கள், முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று (ஏப்ரல் 1) விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, அனைத்து ஆம்னி பேருந்து நிலையங்களிலும் அங்கீகாரமில்லாத முகவர்கள், தரகர்களை அப்புறப்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட்டது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குத் தனியாக காவல் நிலையம் அமைக்க மதுரை காவல் ஆணையரும், டிஜிபியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக அண்ணாநகர் காவல் உதவி ஆய்வாளர் நேரில் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
�,