புதிய திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாவதைத் தடுக்க முடியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் மஞ்சா வர்மக்கலை பயிற்சிப் பள்ளி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 17ஆம் ஆண்டு விழா மற்றும் வர்ம பிராத்திகாரா சான்றிதழ் வழங்கும் விழா நேற்று (செப்டம்பர் 29) நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “ஆன்லைன் டிக்கெட் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதை அவசர கோலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. ஆனாலும் அது விரைவில் அமல்படுத்தப்படும். ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 50 பைசா என்று இருந்த பராமரிப்புச் செலவை நான்கு ரூபாயாக அரசு உயர்த்தி கொடுத்துள்ளது. இதன் விளைவாக தியேட்டர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
1000 திரையரங்குகள் நிரந்தரமாகச் செயல்பட அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த கடம்பூர் ராஜு, “தமிழ்த் திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகளவில் வெளியிடப்படுகிறது. எனவே அங்கிருந்துகூட புதிய திரைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்படலாம். அதை எந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்குத் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் சாத்தியமாகும். எங்கள் யோசனையை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். முடிந்தவரை கட்டுப்படுத்தப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.�,