~ஆதிச்சநல்லூர் ஆய்வு: மத்திய அரசு புறக்கணிப்பு!

Published On:

| By Balaji

ஆதிச்சநல்லூர் அகழாய்வு விவகாரத்தில் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதைத் தவிர்த்து, தூத்துக்குடி சிவகளைபரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டுமென்று கோரி, தனியாக மனு தாக்கல் செய்திருந்தார்.

நேற்று (பிப்ரவரி 15) நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குஜராத்தில் அகழாய்வு மேற்கொள்ள 1,000 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்தில் அகழாய்வுப் பணிக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்தை மத்தியத் தொல்லியல் துறை புறக்கணிக்கிறது” என வாதிட்டார்.

இதையடுத்து, ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் முடிந்தும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்தனர் நீதிபதிகள். “இது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு அகழாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலப் பொருட்களின் வயதைக் கண்டறியும் சோதனைக்காக, அவற்றை புளோரிடாவுக்கு அனுப்பவில்லை. இவை அனைத்தும், தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லாததையே காட்டுகிறது. தமிழகம் இந்தியாவில்தானே இருக்கிறது. தமிழகத்துக்குப் பெருமையென்றால், அது இந்தியாவையும் சேரும்தானே” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், அகழாய்வு மேற்கொள்வதில் மத்திய அரசு பாகுபாடு காட்டவில்லை என்று தெரிவித்தார். இது குறித்து தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share