‘சாதாரண மனிதனின் அதிகாரம் – ஆதார்’ என்ற வாசகத்தோடு இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் அடையாள அட்டையில் ஒருவருடைய பெயர், முகவரி இதனுடன் கைரேகை, கண் பாவை ஆகியவைகளும் பதிவு செய்யப்படுகின்றன. இந்த ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி இன்னும் முழுமை அடையாத நிலையில், மத்திய அரசு அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று வலிறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில், அரசின் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமில்லை, மத்திய அரசு ஆதார் அடையாள அட்டையைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், மீண்டும் மீண்டும் மத்திய அரசு ஆதார் எண் கட்டாயம் என்று கூறிவருகிறது.
இந்நிலையில், வருமானவரி சட்டப்படி பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு விசாரித்தது. மத்திய அரசு மீண்டும் மீண்டும் ஏன் ஆதார் எண் கட்டாயம் என்று வலியுறுத்தி வருகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, வருமானவரி தாக்கல் செய்யும்போது பலரும் பொய்யான தவல்களை அளித்து பல பான் கார்டுகளைப் பெற்றுள்ளனர். அதேபோல செல்போன் சிம் வாங்கும்போதும் தவறான முகவரியை அளித்துள்ளனர். இதைத் தடுக்க ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஆதார் எண் கட்டாயம் தொடர்பான இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு வருமானவரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றார். இதைத் தடுக்க பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என்று மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மீண்டும் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி, ஒருவர் வருமானவரி ஏய்ப்பு செய்வது வெட்கக்கேடானது. வரி ஏய்ப்பை தடுப்பதற்காக பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 27ஆம் தேதி, வருமானவரி சட்டப்படி பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவன் பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், அவர் தனது வாதத்தில், “அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவரின் கைரேகை பதிவு, கண் பாவை படம், தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு, தனி மனிதனுடன் சட்ட விரோதமாக பேரம் பேசுகிற செயல்தான் இந்த ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு. ஆதார் எண்ணை ஒருவர் தானாக முன்வந்து தர வேண்டும். ஒருவர் தன்னுடைய தகவல்களை மூன்றாம் நபரிடம் கொடுக்க மக்களைக் கட்டாயப்படுத்துவது அரசின் கடமை அல்ல. அப்படி கட்டாயப்படுத்துவது அரசாங்கம் அல்ல. ஒரு மனிதனின் பயோமெட்ரிக் தகவல்களைப் பெறுவதன் மூலம் அவனுடைய உள்ளுக்குள் நுழைகிறது அரசு. இதன் மூலம், இப்போது அந்த மனிதன் உலகத்தில் எந்த இடத்தில் இருக்கிறான் என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். இது தனி மனிதனின் அந்தரங்கத்தில் தலையீடு செய்யும் செயலாகும். ஆதார் முற்றிலும் தன்னார்வமாக வந்து அளிக்கப்பட வேண்டியது. ஆனால், அரசாங்கம் சர்வாதிகார அணுகுமுறையுடன் கைரேகை, கண் பாவை போன்ற பயோமெட்ரிக் தகவல்களை கட்டாயமாகக் கேட்கிறது.
இந்த அரசாங்கம் நாட்டின் குடிமகனை தனிமனிதனாகப் பார்க்காமல் ஆதார் எண் மூலம் அவனை ஒரு எண்ணாகக் கருதுகிறது” என்று வாதிட்டார்.
அப்போது, தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இந்த நீதிமன்றம் முன்பு தனி மனித அந்தரங்கம் என்பது ஒரு பிரச்னையே இல்லாதபோது ஏன் இந்த வழக்கறிஞர் நேற்றிலிருந்து வாதாடிக்கொண்டிருக்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஷ்யாம் திவன், “தனி மனித அந்தரங்கம் பற்றிய பிரச்னை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளது. இப்போது, நீங்கள் உங்கள் தரப்பு நன்மைகளின் அடிப்படையில் வாதிடுங்கள்” என்று கூறிய அவர், இந்த வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்க கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்களின் ஆதார் எண், சாதி, போன் நம்பர் ஆகியவைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கோரியுள்ளது என்ற செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வியாழக்கிழமை வெளியானது. பேராசிரியர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கும் இந்த நடவடிக்கை 60 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் ஒரு மாதத்துக்குள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பேராசிரியர்களின் ஆதார் எண் கேட்பதன் நோக்கம், ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் வேலை செய்வதைத் தடுக்கவே இந்தத் திட்டம். நிறைய போலியான பேராசிரியர்கள் இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய போலி பேராசிரியர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை நீக்க ஆதார் எண் மற்றும் இதர விவரங்கள் உதவும்” என்று மனிதவள மேம்பாட்டுத்துறையின் கூடுதல் செயலர் சுப்பிரமணியன் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.�,