�
ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதுவரையில் அரசுக்கு ரூ.90,000 கோடி மிச்சமாகியுள்ளதாக இந்தியத் தனிநபர் அடையாள ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ISB) சார்பாக ஹைதராபாத் நகரில் மூன்று நாள் மாநாடு ஜூலை 11ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய இந்தியத் தனிநபர் அடையாள ஆணையத்தின் தலைவரான ஜே.சத்ய நாராயணா, “ஆதார் திட்டத்தால் இதுவரையில் ரூ.90,000 கோடிக்கு மேல் சேமிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு, உணவு & பொது விநியோகம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளை வைத்தே இந்த விவரங்கள் கிடைத்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 3 கோடி மக்கள் ஆதாரைப் பயன்படுத்துகின்றனர். ரேஷன், பென்சன், கிராமப்புற வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட தேவைகளுக்காகவே ஆதார் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
பயோ மெட்ரிக் பயன்பாட்டில் நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஆதார் நடைமுறையில் அதிகப் பாதுகாப்பு, ஆதார் பதிவைச் சுலபமாக்குவது, மோசடிகளை எளிதாகக் கண்டறிவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார். ஆதார் திட்டம் வந்த பிறகு அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகள் பெறவும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்குச் சேரவேண்டிய நலத் திட்ட உதவிகளும் மானியமும் இடைத் தரகர்களால் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே ஆதார் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக அரசு தரப்பு கூறுகிறது.�,