ஓசூர் அருகே சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட நந்தீஸ்-சுவாதி ஆகியோர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓசூருக்கு அருகே உள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த நந்தீஸ்-சுவாதி ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர். தலித் சமூகத்தைச் சார்ந்த நந்தீஸை திருமணம் செய்து கொண்டதற்கு சுவாதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓசூர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நந்தீஸ்-சுவாதி ஆகிய இருவரையும் கடந்த நவம்பர் 10ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது உறவினர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனிடையே நந்தீஸ் -சுவாதி ஆகியோரின் உடல்கள் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில் அவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சுவாதியின் தந்தை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீதிக்கட்சி தொடங்கிய தினத்தை நினைவுகூர்ந்து நேற்று (நவம்பர் 20) திமுகவினருக்கு மடல் எழுதியுள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகேயுள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த இளைஞர் நந்தீஷ்-இளம்பெண் சுவாதி ஆகிய இருவரும் சட்டப்படியான திருமண வயதை எட்டிய நிலையில், சாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலைப்படாமல் மனதால் ஒன்று கலந்து, திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் கடத்தப்பட்டு, சித்ரவதைகளுக்குள்ளாகி, கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் பகுதியில் காவிரி ஆற்று நீரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள செய்தி, தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது” என்று வேதனைத் தெரிவித்துள்ளார்.
“பெற்று – வளர்த்து – தாலாட்டி – சீராட்டி – பாசம் பொழிந்து -அதே பாசத்தை தன் மீதும் காட்டிய மகளை, தானே முன்னின்று கொலை செய்கிற கொடுமை நடக்கிறதென்றால், இந்த மண்ணில் மனித உறவுகளைவிட, மனிதாபிமான உணர்வைவிட, பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா என்ற கேள்வி எழுவதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், சட்டத்தை மீறி, சாதி ஆணவத்துடன் பெற்ற மகளையும் அவரது கணவரையும் தீர்த்துக் கட்டுவது என்பது மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றம் எனவும் தெரிவித்துள்ளார்.
“ நல்லிணக்கம் நிலவும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவும் கூடாது. இந்த மண், அறிவால் பண்படுத்தப்பட்ட மண். இங்கே அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சாதி வெறி தலைவிரித்தாடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும்” என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திமுக இத்தகைய சாதி வெறிப் படுகொலைகளைக் கண்டிப்பதில்லை என்றும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது என்றும் சிலர் தேவையற்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க. ஆதரிக்காது என்று தனது அறிக்கையில் விளக்கியுள்ள ஸ்டாலின், “அடுத்து வரும் தேர்தலில் தி.மு.கழகம் ஆட்சியமைக்கும்போது, சாதி வெறிக் கொலைகளைத் தடுக்கவும் அத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்கவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் உறுதியளித்துள்ளார். “ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மனித மனங்களை வெல்வோம்;. சாதி வெறி ஒழித்து, பெரியார் நினைவு சமத்துவபுரங்களை பெருமிதத்துடன் மலரச் செய்திடுவோம்” என்றும் தொண்டர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.�,