தினேஷ் அகிரா
“கால ஓட்டத்தில் ஒரு கிரிக்கெட் வீரரின் ஓட்டங்களோ. வெற்றி தோல்விகளோ நம் நினைவில் தங்கி இருக்காது ; மாறாக நம் மனதில், நம் கற்பனையில் அவர் என்னவாகப் பதிந்திருக்கிறாரோ அதுதான் நிலைத்து நிற்கும்” – இது கிரிக்கெட் ஆட்டம் குறித்த நெவில் கார்டஸின் கூற்று.
நமக்குப் பிடித்தமான ஒரு வீரரை நினைத்ததும் நம் மனக் கண்ணில் உடனடியாகத் தோன்றுவது என்ன? ஒன்று அவரது தனித்துவமான ஷாட் (அ) விக்கெட் (அ) காட்ச். மற்றொன்று அவரது தனிப்பட்ட குணாதிசயம். களத்தில் ஒரே விதமான சீருடையை அணிந்து ஓரணியாக ஆடினாலும் மாறுபட்ட ஆளுமையுடைய தனி மனிதர்களின் கூட்டிணைவுதான் கிரிக்கெட்டை உயிர்ப்புள்ள, சுவாரஸ்யமான ஆட்டமாக மாற்றியுள்ளது.
**பிராட்மேனின் ஆளுமையும் ஆட்டமும்**
கிரிக்கெட்டின் கடவுள் எனக் கருதப்படும் டான் பிராட்மேன், தான் விளையாடிய காலத்தில் தன் சக வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினரால் வெறுக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். பிராட்மேனின் புதிரான திறமையையும் எவருடனும் ஒட்டாத அவரது குணாதிசயத்தையும் கண்டு அவரது சகாக்கள் ஒரு சேர எரிச்சலும் வியப்பும் கொண்டிருந்திருக்கின்றனர். பிராட்மேன் இயல்பிலேயே ஒரு தனிமை விரும்பி. ஒவ்வோர் ஆட்டத்துக்கும் முன்பாகவும் இசைக் கச்சேரி கேட்கும் வழக்கத்தை பிராட்மேன் கொண்டிருந்தார். பிராட்மேனின் தனித்துவமான காலாட்டம் (footwork), இசையின் துடிப்பை அவர் தன் மட்டையாட்டத்தில் பொருத்திக்கொண்டதன் விளைவு என்கிறார் மார்ட்டின் குரோ.
கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத இந்த விஷயங்களை எல்லாம் பிராட்மேனால் எப்படி நிகழ்த்த முடிந்தது? பால்யத்தில் நண்பர்கள் யாருமின்றி வீட்டின் பின்புறத்தில் தனி ஒருவனாக கோல்ப் பந்தை ஸ்டம்பால் அடித்து விளையாடியபோது இருந்த மனநிலையை அவர் கடைசி வரை மாற்றிக்கொள்ளவேயில்லை. அதுதான் அவரை மேதையாக மாற்றியது.
**அக்தரின் ஆவேசம்**
ஷோயப் அக்தரைக் கொண்டாடியவர்கள்கூட அவர் மீது கரிசனத்தோடு வைக்கும் ஒரு விமர்சனம், அக்தர் ஆட்டத்தை இன்னும் சற்றே விளையாட்டு உணர்வுடன் ஆடியிருக்கலாம் என்பது. ஆனால், அந்த அ-விளையாட்டு உணர்வு இல்லையென்றால் அவர் அக்தராக இருந்திருக்க மாட்டார். அக்தர், தன் சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்ப நாட்களிலேயே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்ற உண்மையை உணர்ந்துகொண்டார். காரணம், அவருக்கு இருந்த மோசமான உடல் தகுதி. அதற்காக அவர் தன் வேகத்தையோ, பாணியையோ மாற்றிக்கொள்ளவில்லை. நாளை பந்தைப் பிடிப்போமா இல்லையா என்பது விடிந்தால்தான் தெரியும். அக்தர் வீசும் பந்தின் வேகத்தைவிட இந்த உண்மைதான் அவர் மனதில் எப்போதும் தடதடத்துக் கொண்டிருந்தது: வீசும் ஒவ்வொரு பந்தும் கடைசிப் பந்து. அக்தருக்கு அணியின் வெற்றி தோல்விகள் முக்கியமல்ல. இதுபோன்ற ஒரு வேகப்பந்து வீச்சாளர் பாகிஸ்தானில் பிறக்கவில்லை என்று பெயரெடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
இந்த உணர்வுதான், ஷார்ஜா டெஸ்டில் தன் அணி 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும் வெற்றி தோல்விகளைக் குறித்துச் சிந்திக்காமல் மேத்யூ ஹைடனுக்கு எதிராக ஆக்ரோஷமாக அவரை வீச வைத்தது.
**கங்கூலி: தன்னம்பிக்கையின் மறுபெயர்**
தனி மனித ஆளுமை ஒருவரது ஆட்டத்தில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்துக்கு நல்ல உதாரணம் சவுரவ் கங்கூலி. கிரிக்கெட் வாரியத்தில் தனக்கிருந்த செல்வாக்கைக் கொண்டு கிரேக் சாப்பலைப் பயிற்சியாளராகக் கொண்டுவருகிறார். சாப்பல் பதவிக்கு வந்த கையோடு முதல் வேலையாக கங்கூலியை மட்டம் தட்டி தனது ஆஸ்திரேலியத் தனியாவர்த்தனத்தை ஆரம்பிக்கிறார். கங்கூலிக்கு இதைவிடப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், புதிய பயிற்சியாளர் குறித்த விவாதத்தின்போது சாப்பலுக்கு எதிராகக் கருத்து கூறிய திராவிட் சாப்பலின் தொழில்முறை பிடித்துப்போய் அவருடன் ஒத்துப்போனதுதான்.
தனது சிபாரிசினால் பதவி பெற்றவர் தன்னை வீழ்த்தப் பார்ப்பதோடு தன் சகாவையும் தனக்கெதிராகத் திருப்பப் பார்க்கிறார் என்னும் நிலை வரும்போது வேறு ஒருவராக இருந்திருந்தால் மனம் தளர்ந்திருப்பார். ஆனால், கங்கூலி கடுமையாக முயன்று தனது தனிப்பட்ட ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை உறுதி செய்கிறார். சாப்பல் என்ற ஒரு பெரும் புயலைச் சமாளித்து வந்த பிறகான கடைசி மூன்று வருடங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
கிரிக்கெட் வரலாற்றாய்வாளரான போரியா மஜூம்தார் கங்கூலி – சாப்பல் விவகாரத்தை இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பெக்காம் – அலெக்ஸ் பெஃர்குசன் உடன் ஒப்பிடுகிறார். கங்கூலிக்கு இருந்த தன்னம்பிக்கையும் ஆளுமையும் பெக்காமுக்கு இல்லாததால் அவரால் பயிற்சியாளரின் எதிர்ப்பைச் சமாளித்து கங்கூலியைப் போல மீண்டு வர முடியவில்லை என்கிறார் மஜூம்தார்.
**தனிப்பட்ட ஆளுமையும் ஆட்டத்தின் தன்மையும்**
சிக்கல் நிறைந்த தனிமனித ஆளுமை ஒருவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் எத்தனைப் பெரிய எதிர்மறை பாதிப்புகளை உருவாக்கும் என்பதற்கு உதாரணங்களாக மார்ட்டின் க்ரோவையும் நாஸர் ஹுஸைனையும் கூறலாம். ஓரிரண்டு முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளை மட்டுமே ஆடியிருந்த க்ரோ தனது பத்தொன்பதாவது வயதில் சர்வதேச அரங்குக்குள் நுழைகிறார். பிற்காலத்தில் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்ட வீரரென்று பெயரெடுத்தாலும் க்ரோ அடிப்படையில் அடித்து ஆடுவதில் நாட்டமுள்ள ஒரு ஸ்ட்ரோக் பிளேயர். சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு வந்த புதிதில் அணியில் இருந்த சீனியர் வீரர்களால் ஏற்பட்ட அவமானங்கள், அணியில் தனது இடம் குறித்த பயம் போன்றவையே தன் இயல்பை பாதித்துத் தன்னைத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் தற்காப்பு ஆட்டக்காரராக மாற்றியது என்கிறார் குரோ. அணியில் சக வீரர்களுடனான மோதல் போக்குகள், குடும்பத்தில் தனிப்பட்ட உறவுகளில் தனக்கு இருந்த சிக்கல்கள் ஆகியவற்றுக்கும் சிறு வயதில் தனக்கிருந்த ஆளுமைக் குறைபாடே காரணம் என்கிறார் க்ரோ.
நாஸர் ஹுஸைனின் கதை இன்னும் சுவாரஸ்யமானது. உள்ளூர் அளவிலான கிரிக்கெட்டில் கெவின் பீட்டர்சன் பாணியிலான அதிரடி வீரராக இருந்த நாஸர் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு வந்த உடனே எதிர்மறை எண்ணங்களாலும் அணியில் தனது இடம் குறித்த பயத்தினாலும் மந்தமான ஆட்டக்காரராக மாறுகிறார். வழக்கமாக மூன்று அல்லது நான்காம் நிலையில் ஆடும் நாஸர், அணியின் தொடக்க வீரர்கள் நிலையான துவக்கம் அமைத்துக் கொடுக்கும் ஆட்டங்களில் பெரிதாகச் சோபிக்க மாட்டார். 10 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறும் சமயங்களில் சிறப்பான ஆட்டத்தை ஆடுவார். அணி தத்தளிக்கும் சமயங்களில் தனது கவனம் முழுக்கவும் அணியை மீட்டெடுப்பதில் குவிவதால், தனது தனிப்பட்ட ஆட்டம் குறித்த பயத்திலிருந்து விலகி, தம்மால் நேர்மறையாக விளையாட முடிவதுதான் காரணம் என்கிறார் நாஸர். ஒரு கேப்டன் தனது அணி நல்ல துவக்கம் கண்டுவிடக் கூடாது என்று நினைப்பதை விட வேறு என்ன பெரிய நகை முரண் இருந்து விட முடியும்!
சிறு வயதில் கிரிக்கெட் ஆட்டம் தொடர்பாக தனக்கும் தன் தந்தைக்கும் இடையே இருந்த முரண்பாடுதான் தனக்கிருந்த ஆளுமைச் சிக்கலுக்குக் காரணம் என்கிறார் நாஸர். இந்தத் தனித்துவமான ஆளுமைதான் ஆண்ட்ரூ பிலிண்டாஃப், காட்டிக் போன்ற மாறுபட்ட மனிதர்களைப் புரிந்துகொண்டு அணியை மேம்படுத்தக் காரணமாகவும் அமைந்தது.
டேவிட் சின்காக் என்ற என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘சைனாமேன்’ பந்து வீச்சாளரின் (இடக்கை லெக் ஸ்பின்னர்) கதை மிகவும் வித்தியாசமானது. தான் சந்தித்த பந்து வீச்சாளர்களிலேயே மிகவும் புதிரானவர் என்று கேரி சோபர்ஸால் வியந்து போற்றப்பட்ட சின்காக் ஆட்டச் சலிப்பின் காரணமாக, தன்னுடைய இளம் வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ஒரு மட்டையாளனை ஒருமுறை ஆட்டமிழக்கச் செய்த பிறகு அவருக்கு எதிராக மறுபடியும் வீசத் தனக்கு ஆர்வம் இருப்பதில்லை என்று கூறினார். சின்காக் ஓய்வுக்குப் பிறகு வெற்றிகரமான வணிக நிர்வாகியாக மாறினார்.
மனிதர்கள் பலவிதம். ஆடுகளத்தில் வெளிப்படும் பல விதமான இயல்புகளுக்குப் பின்னே இருக்கும் காரணிகளில் பல ஆட்டத்துக்கு அப்பாற்பட்டவை. அவற்றையும் சேர்த்து அறிந்துகொள்ளும்போது கிரிக்கெட்டைப் பற்றிய நமது புரிதல் விசாலமடையும். ஆட்டம் என்பது வெறும் ஆட்டமல்ல என்பதும் புரியும்.
சி.எல்.ஆர். ஜேம்ஸின் இந்த மேற்கோளோடு இந்தக் கட்டுரையை முடிக்கலாம். “கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே அறிந்தவர்களுக்கு கிரிக்கெட்டைப் பற்றி என்ன தெரியும்?”�,”