ஆடுகளம் படத்துக்குப் பின் அதில் கதாநாயகியாக நடித்த தப்ஸி பன்னு தமிழ்த் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்களாலும் திரையுலகினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒன்றிரண்டு படங்களில் நடித்து தனக்கான பாதையை உருவாக்கிய தப்ஸி, திடீரென ரூட்டை மாற்றி தெலுங்கு பக்கமும் பாலிவுட் பக்கமும் பயணம் போனார். தப்ஸி தமிழில் இனி தலைகாட்டுவாரா என எதிர்பார்ப்பு நிலவியபோது மூன்று ஆண்டுகளுக்குப் பின் தற்போது புதிய படத்தில் களமிறங்கவுள்ளார்.
நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடித்துவரும் தப்ஸி பாலிவுட்டில் அனுராக் காஷ்யப், சிபாசிஷ் சர்கார் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் இந்தப் படம் துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் பற்றியதாக உருவாகி வருகிறது. பிரகாஷி, சந்திரோ ஆகிய இருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழில் அவர் ரீஎன்ட்ரியாகவுள்ள ‘கேம் ஓவர்’ படத்திலும் பாலிவுட்டைப் போலவே பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவே பெரும்பாலான காட்சிகளில் நடித்துள்ள அவர் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
“மிக நீண்ட ஆனால் பல்வேறு அனுபவங்களைத் தந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி காயங்களுடன் நான் உணர்ந்திராத பல அனுபவங்களை இந்தப் படம் தந்துள்ளது” என்று தப்ஸி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இதை இயக்குகிறார். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.�,”