கேரளாவில் நடைபெற்றுவரும் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்க்கும் பலம் அமித் ஷாவுக்குக் கிடையாது என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளாவின் கண்ணூரில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அமித் ஷா, “சபரிமலை விவகாரத்தை இடதுசாரி அரசு தவறாகப் பயன்படுத்திவருகிறது. ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்கக் கூடாது. போராட்டம் நடத்தும் மக்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டால், இந்த அரசை பாஜகவினர் தூக்கி எறிவார்கள்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், பாலக்காட்டில் நேற்று (அக்டோபர் 28) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பினராயி விஜயன் அமித் ஷாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார். “உச்ச நீதிமன்றத்தை அச்சுறுத்த முயற்சிக்க நீங்கள் யார்? உச்ச நீதிமன்றத்தை அச்சுறுத்தும் பின்னணியில் உள்ள உங்களின் நோக்கம் வெளிப்படுகிறது. பாபர் மசூதி வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. உங்களின் விருப்பப்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா” என்று அமித் ஷாவுக்கு கேள்வி எழுப்பினார்.
“நாட்டை ஆளும் கட்சியின் தலைவரிடமிருந்து வர வேண்டிய வார்த்தைகளா இவை? ஆளும் கட்சியின் தலைவர் இதுபோன்ற ஜனநாயகத்திற்கு எதிரான நிலையை எடுக்கலாமா?” என்று விமர்சித்த பினராயி, “பாஜக தொண்டர்களின் தலைவர் அமித் ஷா கேரள அரசு அப்புறப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அரசை வீழ்த்தும் அளவுக்கு அந்த உடம்புக்கு பலம் இருப்பதாக தெரியவில்லை. குஜராத்தில் வேண்டுமானால் அவர் அத்தகைய முயற்சிகளை செய்துபார்க்கலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், “எத்தனை ஆண்டுகளாக நீங்கள் கேரளாவைக் குறிவைக்கிறீர்கள். மிகுந்த எதிர்பார்ப்போடு இங்கு யாத்திரை நடத்தினீர்கள். ஆனால், இறுதியில் ஓட்டம் பிடித்தீர்கள். யாத்திரைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோமா? நாராயண குரு, சத்தம்பி சுவாமி போன்ற சமூக செயற்பாட்டாளர்களின் மண் கேரளா. இந்த மண்ணில் உங்களுக்கு இடம் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.�,