நீண்ட காலம் மாவட்ட ஆட்சியர்களாக ஒரு சில ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து வருவதற்கு, ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர். அப்போது, மாநிலம் முழுவதும் ஒரு சில ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சியர் பணியில் நீண்டகாலம் தொடர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்தனர். இதனால் புதிதாகப் பணிக்கு வரும் ஐஏஎஸ் அதிகாரிகளின் நம்பிக்கை பாதிக்கப்படும் என்றனர்.
இது தொடர்பாக அச்சங்கத்தினர் ஒரு அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தனர். அதில் ஆறு முக்கியப் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவிக்காலமும் அதில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் நிலை எனும் தலைப்பில் அளிக்கப்பட்ட இந்த 15 பக்க அறிக்கையில், குறிப்பிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் 7 முதல் 8 ஆண்டுகள் வரை இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பொறுப்பில் 2 முதல் 3 ஆண்டுகள் வரை இருந்தாலே போதுமானது என்று பரிந்துரை செய்துள்ளது ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம்.
தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர்களுள் டி.என்.ஹரிஹரன் 8.6 ஆண்டுகள், கே.எஸ்.பழனிசாமி 7.9 ஆண்டுகள், கே.வீரராகவ ராவ் 6.2 ஆண்டுகள், எல்.சுப்பிரமணியன் 5 ஆண்டுகள் பதவியில் இருந்துவருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக இந்த அதிகாரிகள் நீண்டகாலம் ஆட்சியர் பொறுப்பில் இருப்பதாகவும், இதனால் இளம் அதிகாரிகளின் நம்பிக்கை சிதைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
”ஒவ்வொரு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி மூப்பு மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படும்போது கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), கூடுதல் ஆட்சியர் (வருவாய்), மாநகராட்சி ஆணையர்கள் போன்ற பொறுப்புகளை வகிக்கும்போது நகர மற்றும் கிராமப்புற வளர்ச்சி குறித்த அனுபவங்களைத் தங்களது பதவிக்காலத்தில் பெறுவார்கள். தற்போதுள்ள நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பலம் அதிகரிக்கப்படவில்லை. ஒவ்வொரு அதிகாரியும் ஒரு துறையின் தலைமைப்பொறுப்பைக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது வகிக்கும் வாய்ப்பைப் பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பொறுப்பை வகிக்கும் தகுதியுடன் பலர் தற்போது உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.�,