ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, வரும் ஜனவரி 25ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையைப் பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த மாதம் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல் என்ற 11ஆம் வகுப்பு மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக வந்த தகவல், எனக்குப் பெரிய அதிர்ச்சியாக உள்ளது. வரும் மார்ச் மாதம் எங்களுக்கு பொதுத் தேர்வு வரவுள்ளது. இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், பொதுத் தேர்வில் பங்கேற்பதற்காக வழங்கப்படும் பயிற்சியில் பாதிப்பு ஏற்படும். தற்போது, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு, நேற்று (ஜனவரி 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, “நேற்று நடந்த போராட்டத்தின்போது, அரசுப் பள்ளிகளில் 39.7% ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி செய்முறைத் தேர்வு, மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வு வரவுள்ளது என்றும், இதனால் ஆசிரியர்களின் போராட்டத்தால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று தெரிவித்தனர். வரும் ஜனவரி 25ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப உத்தரவிட்டனர்.�,